176 பேர் உயிரிழப்பு… உக்ரைன் விமானத்தை தவறுதலாக தாக்கப்பட்டது – ஈரான் ஒப்புதல்

Read Time:3 Minute, 18 Second

உக்ரைன் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டது என ஈரான் ஒப்புக்கொண்டது.

அமெரிக்கா ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலமானியை கொலை செய்ததும் இருநாடுகள் இடையேயும் போர் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 8-ம் தேதி அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அப்போது தெக்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்குள் சிக்கியது. விமானம் தீ பிடித்து தரையில் விழுந்ததில் 176 பேர் பலியாகினர். இதில் 147 பேர் ஈரானை சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது என அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெரிவித்தன. தொடர்ந்து ஈரான் மறுத்துவந்தது, விமானத்தின் கருப்பு பெட்டியை வழங்க மாட்டோம் எனக் கூறியது. இறுதியில், உக்ரைன் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டது என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளது என்றும் கூறியுள்ள ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளது. மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் ஹுசைன் ரவுகானி கூறும்போது, “176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது அழ்த்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனிருக்கும். என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார். இவ்விவகாரத்தில் ஈரானை மீண்டும் அமெரிக்கா கார்னர் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் ஈரானை வசைப்பாடியது. இப்போது ஈரான் தவறு என தெளிவாகியுள்ளது, எனவே பிரச்சினைகள் எழும் என்றே கூறப்படுகிறது.

கடந்த 2014 ஜூலையில் உக்ரைன் வான்பரப்பில் சென்ற மலேசிய விமானம் ரஷிய ஏவுகணையால் தாக்கப்பட்டு சுமார் 298 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.