சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளும் மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது. 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது. தற்போது 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு மூலம் கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் தொன்மையானது என்பது தெரியவந்தது.
பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், செப்பு காசுகள் உள்பட பழங்கால பொக்கிஷங்கள் கிடைத்தன. கீழடி அகழ்வாய்வில் பானை ஓடு, சுடு மண் பொருட்கள், கீரல் எழுத்துகள் என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கீழடி நாகரிகத்தை உலக மக்களும் அறிந்துகொள்வதற்கு வசதியாக 24 மொழிகளில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொல்லியல் துறை கமிஷனர் த.உதயசந்திரன் தினத்தந்திக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழரின் பாரம்பரியம் உலக மக்களையும் சென்றடைவதற்காக கீழடி அகழாய்வு அறிக்கை 24 மொழிகளில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
சமஸ்கிருதம், இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, குஜராத்தி, அசாமீஸ் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ரஷியன், மான்டரின், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பனீஸ், இத்தாலி, போர்ச்சுகீஸ், அரபிக் மற்றும் ஹாங்குல் ஆகிய உலக மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் திறமைவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தொல்லியல் துறை அரங்கில் இந்த புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். தமிழ் மற்றும் ஆங்கில புத்தகத்தின் விலை ரூ.50. மற்ற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் விலை ரூ.200 எனவும் கூறியுள்ளார்.