1,350 எம்.பி.க்கள் அமரும் வகையில் முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்

Read Time:7 Minute, 32 Second
Page Visited: 51
1,350 எம்.பி.க்கள் அமரும் வகையில் முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்

நாடாளுமன்றத்தில் 1,350 எம்.பி.க்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாதிரி வரைபடம் தயாராகி உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

டெல்லியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடமானது ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தனர்.

இந்த நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை கவனத்தில் கொண்டும், புதிதாக ஒரு நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. குறிப்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் கடந்த ஆண்டு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் நாடாளுமன்றத்துக்கு 2022-ம் ஆண்டுக்குள் புதிய கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த கட்டிடம் மக்களவை, மாநிலங்களவை என இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும் கட்டப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை முக்கோண வடிவத்தில் கட்டி முடிப்பதற்கு ஆமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் யோசனை தெரிவித்து இருக்கிறது. இந்த நிறுவனம் மாதிரி வரைபடம் ஒன்றையும் தயார் செய்து அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வரைபடத்தின் படி, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் முக்கோண வடிவில் அமையவுள்ளதாக தெரிகிறது. அதன் மேற்பரப்பில் கூம்பு வடிவிலான ஓர் அமைப்பும், அதற்கு அருகில் மூவர்ணத்துடன் கூடிய ஸ்தூபி (அரைக்கோளம்) வடிவ அமைப்பும் உள்ளன.

இந்த யோசனை ஏற்கப்பட்டால், முக்கோண வடிவ நாடாளுமன்ற கட்டிடம், தற்போதுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அடுத்து அமையும். இந்திரா காந்தி தேசிய கலை மையம், இட மாற்றம் செய்யப்படும். தேசிய ஆவண காப்பகம் மறுவடிவமைப்பு செய்யப்படும். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், தற்போதுள்ள தெற்கு பிளாக் வளாகத்தின் பின்புறம் மாற்றப்படும். இதே போன்று துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம், வடக்கு பிளாக்கின் பின்புறம் அமையும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அகலமான, சவுகரியமான, பரந்த இருக்கைகளில் எம்.பி.க்கள் அமர வழிவகை செய்யப்படும். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கிறபோது ஒரு இருக்கையில் 3 எம்.பி.க்கள் அமரக்கூடிய அளவுக்கு இட வசதி இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் 2026-ம் ஆண்டுவாக்கில் 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என்று அரசியல் வல்லுனர்கள் மிலான் வைஷ்ணவ், ஜாமி ஹிண்ட்சன் ஆகியோர் கணித்துள்ளனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாடாளுமன்ற வளாகம் 13 ஏக்கரில் பிரமாண்டமானதாக அமையும். மத்திய அரசு செயலகங்கள் அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்படும். மத்திய அரசு செயலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். அத்துடன் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரைசினா ஹில் பகுதியில் இருந்து, விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக தியான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கம் வரை அமைந்துள்ள ராஜபாதையும் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

இதுகுறித்து அக்கட்டிடத்தின் வடிவமைப்பாளர் பிமல் படேல் பேசுகையில், புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தாராளமாக அமரும் வகையில் இருக்கை வசதிகளை அமைக்கவுள்ளோம். தற்போதைய மக்களவையில் எம்.பி.க்களுக்கான இருக்கைகள் மிக குறுகலாக இருக்கின்றன. போதிய இடமில்லாத காரணத்தால், தூண்களுக்கு பின்னால் கூட இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த நெருக்கடியை களையும் விதமாக, புதிய நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான இருக்கைகளை வடிவைத்திருக்கிறோம்.

இவற்றில் இரண்டு பேர் வரை அமரலாம். நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தின்போது 3 எம்.பி.க்கள் வரை கூட ஒரே இருக்கையில் அமர்ந்துகொள்ள முடியும். அதேபோல், சபாநாயகர் அல்லது ஒரு எம்.பி. பேசும்போது அனைத்து உறுப்பினர்களும் தெளிவாக கேட்கும் வகையிலும் கட்டிடத்தின் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தில் அமைச்சக அலுவலகங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். இந்நிலையில், பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை அருங்காட்சியமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %