மலேசிய பொருளாதாரத்திற்கு இந்தியா வைத்த அதிரடி செக்…! ‘‘நாங்கள் மிகச் சிறிய நாடு தான்’’ என மலேசிய பிரதமர்..!

Read Time:3 Minute, 16 Second

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் ஐ.நா. சபையில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சனம் செய்தார். இதனையடுத்து பதிலடி கொடுத்த இந்தியா, எங்களுடைய உள்நாட்டு விவகாரம் என்றது. மேலும், மலேசியாவிற்கு அடியை கொடுக்கும் வகையில் பாமாயில் இறக்குமதியை தடை செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி வெகுவாக பாமாயில் இறக்குமதியை இந்திய நிறுவனங்கள் நிறுத்த தொடங்கின.

இந்தியா ஆண்டுதோறும் 9 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பாமாயிலை வாங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவுக்கு மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதி 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 12 ஆயிரம் கோடியாகும்) என மதிப்பிடப்பட்டது. இது மலேசியாவின் மொத்த ஏற்றுமதியில் 18.3 சதவீதமாகும்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார். அவர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பதிலளித்து. இதனால், இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன. இது மலேசியாவிற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இதனால் கவலையடைவதாக குறிப்பிட்ட மகாதீர் முகமது எங்களுடைய கருத்து சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.

பாமாயில் இறக்குமதி விவகாரம் தொடர்பாக மகாதீர் முகமது மீண்டும் பேசுகையில், ‘‘மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா அதனை நிறுத்தி கொண்டுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு தான். அதனால் நாங்கள் மாற்று வழிகள் குறித்து யோசித்து வருகிறோம். விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று கூறியுள்ளார்.