அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் மதுரை‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை…

Read Time:6 Minute, 35 Second

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை (அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை) சர்வதேச அளவில் புகழ் பெற்றது.

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கூறப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அனுமதி தாமதம் ஆனது. அதற்குள் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

மற்ற மாநிலங்களில் அறிவிப்பு வெளியானவுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டப்பணி தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இடம் தேர்வு செய்வதிலேயே 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை என மத்திய ஆய்வுக்குழுவினரை தமிழக அதிகாரிகள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுத்தி விட்டனர். இறுதியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா, மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என அறிவித்தார்.

ரூ.1,350 கோடி செலவில் 3½ ஆண்டுகளில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கட்டுமானபணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜன.27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் பிரம்மாண்டமாக மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.

அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. நிதிநிலை அறிக்கையிலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிகிறது. தற்போது வரை நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டம் அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தும், பிரதமர் அடிக்கல் நாட்டி ஓராண்டு நிறைவடைந்தும் குறித்த காலத்துக்குள் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆண்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் 3½ ஆண்டுகளில் இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு ஏற்படும். ஆனால், தற்போது இது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடன் உதவி அளிக்கவுள்ள ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக் குழுவினர் ‘பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்சா’ இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா? சாலை, விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனாலும், தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. திட்ட அறிக்கையும் (Project Report) தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது 224.24 ஏக்கர் நிலம்மட்டும், மத்திய அரசு சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சுற்றி,ரூ.5 கோடியில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.

‘‘உலகத்தரத்தில் மருத்துவமனையை கட்டுவதற்கே ஜப்பான் நிறுவனத்திடம் கடனுதவி கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிந்துரைக்கும் தரத்தை பயன்படுத்தி இந்த மருத்துவமனை கட்டப்படும்’’ என சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். மதுரை எம்பி சு.வெங்கடேசன் இதுபற்றி தமிழ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “ஜைக்கா நிறுவனம், வரும் மார்ச் மாதத்தில் எவ்வளவுகடன் வழங்குவோம் என்பது உள்ளிட்ட முழு விவரத்தையும் கொடுத்து விடும். கடன் எவ்வளவு கிடைக்கும் என்பதை பொறுத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டிலேயே சேர்க்க வலியுறுத்தி வருகிறேன். இதுவரை 3 முறை மக்களவையில் பேசி உள்ளேன். 6 முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாட்டின் மற்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவியை எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்ததிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திட்டப்பணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கப்பட்டால் தான் மக்களுக்கு விரைவான பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி விரைந்து முடிக்கப்பட மத்திய, மாநில அரசுக்கள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது மக்களின் குரலாக உள்ளது.