இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு; தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் ‘சுகோய் 30’ படைப்பிரிவு

Read Time:6 Minute, 30 Second
Page Visited: 91
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு; தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் ‘சுகோய் 30’ படைப்பிரிவு

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் விமானப்படை தளம் உள்ளது. 1940-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப்படை தளம் இரண்டாம் உலகப் போரின்போது செயல்பாட்டில் இருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை. பின்னர், இந்த தளத்தை சீரமைத்து 1988-ல் சிறிய பயணிகள் விமானம் (வாயுதூத்) சென்னைக்கு இயக்கப்பட்டது.

பயணிகள் வருகை மிகவும் குறைந்ததைத் தொடர்ந்து நாளடைவில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா பகுதியின் பாதுகாப்பிற்காகவும், அண்டை நாடுகள் மூலம் நம் நாட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சமாளிக்கவும் தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுகோய்-30 ரக போர் விமானங்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வந்தன.

சுகோய் ரக போர் விமானங்கள் இயக்குவதற்கு வசதியான படைத்தளமாக கடந்த 2013-ம் ஆண்டு இந்த தளம் தரம் உயர்த்தப்பட்டது.

சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்துடன் பிரமோஸ் ஏவுகணையை இணைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு வெற்றி பெற்றதையடுத்து இந்த ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததையடுத்து தரம் உயர்த்தப்பட்ட தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமான படைப்பிரிவை நிரந்தரமாக ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்திய விமானப்படையில் ‘டைகர் சார்கிஸ்’ என பெயரிடப்பட்ட எண்-222 என்ற விமானப்படை அணி உருவாக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்களுடன் கூடிய புதிய விமானப்படைப்பிரிவு தொடக்கவிழா தஞ்சை விமானப்படை தளத்தில் நேற்று (ஜனவரி-20) காலை நடந்தது. விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் கலந்து கொண்டு புதிய படைப்பிரிவை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய்-30 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்னிந்தியாவில் 2-வது படை தளமாக தஞ்சை விமானப்படை தரம் உயர்ந்துள்ளது. தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையுடன் கூடிய சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானப்படை அணி தொடக்கவிழாவில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் சாகசம் செய்தனர். பின்னர் தஞ்சை விமானப்படை தளத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது தெரியும். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என நவீன தொழில்நுட்பம் மூலம் புதிய கருவிகளை கண்டுபிடிப்போம். நமது முப்படைகள் பலமானதாக உள்ளது. நமது வீரர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. முப்படைகளில் சேர அதிகமானோர் வருகின்றனர். நாங்கள் வீரர்களை தேர்வு செய்வதில் கடினமான வழிமுறைகளை கையாளுகிறோம்.

எந்த சூழ்நிலையிலும் தேசப்பற்றுடன் பணியாற்றக்கூடிய இளைஞர்களை முப்படைகளில் சேர்ப்பதற்கான பணி நடந்து வருகிறது. இந்திய பெருங்கடல் அருகாமையில் உள்ளதால் தஞ்சை விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கும், தஞ்சை விமானப்படை தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பு இல்லை. நமது படையை தரம் உயர்த்தியாக வேண்டும்.

பாதுகாப்பு தொடர்பாக கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் சுதந்திரம் உள்ளது. குறிப்பாக வணிக இயக்கம் நடக்கும் கடல் வழியில் கொள்ளையர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக கண்காணிப்பில் ஈடுபடுவது இயல்பானது. எல்லா நாடுகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது. தஞ்சையில் இந்த விமானப்படை அணி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அதிக அளவு வீரர்களை சேர்த்து அணி விரிவுப்படுத்தப்படும்.

பாகிஸ்தானுடன் விரைவில் போர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என நான் யூகத்தின் அடிப்படையில் கூற முடியாது. எப்போது போர் வந்தாலும் தயாராக இருக்க வேண்டியது ராணுவத்தின் கடமை. எந்த பணியை செய்ய சொல்லி கட்டளையிடப்படுகிறதோ? அதை செய்வதற்காக வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறினார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %