நேபாள ரிசார்ட்டில் கேரளாவை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு; கார்பன் மோனாக்சைடு தாக்கியது தெரியவந்தது

Read Time:2 Minute, 18 Second

கேரளாவை சேர்ந்த 17 பேர் நேபாள நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் கடல் மட்டத்தில் இருந்து 2,500 மீட்டர் உயரத்தில் உள்ள டாமன் என்ற புகழ் பெற்ற சுற்றுலா தலத்தில், எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கினர். ஒரே அறையில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் தங்கினர். அவர்கள் கடும் குளிர் என்பதால் குளிர்காய்வதற்காக கியாஸ் ஹீட்டரை இயக்கியதாக தெரிகிறது.

இதில் கியாஸ் கசிவு ஏற்பட்டதில் அவர்கள் அனைவரும் மயங்கி சரிந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. விடுதி ஊழியர்கள் அறையை திறந்தபோது அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் அங்குள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இறந்த 8 பேரில் 2 தம்பதியரும், அவர்களது 4 குழந்தைகளும் அடங்குவர். பிரவீண் கிருஷ்ணன் நாயர் (வயது 39), மனைவி சரண்யா சசி (34), இந்த தம்பதியரின் மகள்கள் ஸ்ரீபத்ரா (9), ஆர்சா, மகன் அபினவ். மற்றொரு தம்பதியர் ரஞ்சித் குமார் (39), இந்து லட்சுமி பீதாம்பரன் (34) மற்றும் இவர்களின் மகன் வைஷ்ணவ் ரஞ்சித் (2).
ரஞ்சித்குமார், இந்து லட்சுமி பீதாம்பரன் தம்பதியரின் மற்றொரு மகன் மாதவ் உயிர்தப்பினார். சுற்றுலா சென்றிருந்த 17 உறுப்பினர்கள் குழுவில் 4 பேர் பாப்பனம்கோடு ஸ்ரீசித்திரை திருநாள் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முன்னாள் மாணவர்கள் ஆவர். அவர்களின் சடலங்களை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையில் இறங்கியது.

கியாஸ் ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறி தாக்கியது தெரியவந்துள்ளது.