சீனாவை அடுத்து அமெரிக்காவை துரத்தும் கொரானா வைரஸ்… இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Read Time:3 Minute, 37 Second

உலகை தற்போது அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ் கொரானா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. இது, சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்கு சந்தையிலிருந்து தற்போது பரவியுள்ளது. வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய சீன நகரங்களில் பரவும் இந்த கொரானா வைரஸ் தாக்குதலுக்கு நிமோனியா நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் காரணமாக 9 பேர் சீனாவில் பலியாகியுள்ளனர். மேலும் 700 பேரிடம் இந்த வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் இந்த அபாயகரமான வைரஸ் தாக்குதலுக்கு இந்தியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். கொரானா வைரஸ் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 650 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, கனடாவில் 44 பேரும், தைவானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் சார்ஸ் நோய் தாக்குதலில் பலியாகினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சார்ஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது.

தற்போது சீனாவை மீண்டும் துரத்த தொடங்கியுள்ளது. அமெரிக்காவிலும் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும். சாதாரண சளி, குளிர்ஜுரம்தான் இந்த நோயின் அறிகுறிகள். பிறகு நிமோனியா, நுரையீரல் பாதிப்பு என அதன் தாக்கம் தீவிரமடையும். கடைசியில் மரணம் நிகழும்.சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவையும் இந்த வைரஸ் தாக்கியிருப்பதால், தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம். அதனால், இது மிகவும் அபாயகரமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து உள்ளன. சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்ற புதிய தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.