நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்ட இன்டர்போல்

Read Time:6 Minute, 18 Second

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

பெங்களூருவில் பாலியல் பலாத்கார வழக்கை எதிர்க்கொள்ளும் நித்தியானந்தாவின் பாஸ்போா்ட் முடக்கப்பட்டது. 2018-ம் ஆண்டுடன் முடிவடைந்த பாஸ்போா்ட்டை புதுப்பிப்பதற்கு நித்தியானந்தா விண்ணப்பம் அளித்திருந்தாா். அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தல் புகார் வழக்கில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நித்தியானந்தாவை தேடும் பணியும் தீவிரமாகியது. இதற்கிடையே நித்தியானந்தா மீது பலர் புகார்களை தெரிவித்தனர். இதனிடையே தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியானது.

ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நித்யானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியானது.

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதையடுத்து சர்வதேச போலீஸான இண்டர்போலின் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய குஜராத் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது. குஜராத் போலீஸ் வேண்டுகோளை ஏற்று இண்டர்போல் சார்பில் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. ப்ளூ நோட்டீஸ் என்பது ஒருவருர் தலைமறைவாக இருக்கும்போது அவருக்கும் இடம் தெரிந்தாலோ அல்லது தங்கள் நாட்டில் அவர் பதுங்கியிருந்தாலோ இண்டர்போலுக்கு சம்பந்தபட்ட நாடு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு வேண்டுகோள் விடுப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும்.

இந்த ‘புளூ கார்னர்’ நோட்டீசுக்கு பின்னரும் நித்தியானந்தா குறித்த விவரங்கள் கிடைக்காத பட்சத்தில் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். அதன்மூலம் சாமியார் நித்தியானந்தாவுக்கு சர்வதேச அளவிலான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்போல் என்பது சர்வதேச புலனாய்வு அமைப்பாகும். இதில் இந்தியா உட்பட 190 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.

எல்லைகளைத் தாண்டிய காவல் நடவடிக்கைகளுக்காக இண்டர்போல் 8 வகையான நோட்டீஸ்களை பிறப்பிக்கும். அவற்றில் ஒரு நோட்டீசே ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகும். ரெட்கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஒரு நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கண்டுபிடித்து சரணடைய வைத்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இண்டர்போல் ஏற்கிறது என்பதே இதன் அர்த்தம்.

இது தவிர காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் யெல்லோ கார்னர் நோட்டீஸ், குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக் கோரும் ப்ளூ கார்னர் நோட்டீஸ், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு எச்சரிக்கை செய்யும் கிரீன் கார்னர் நோட்டீஸ், அடையாளம் தெரியாத உடல்களைக் கண்டறியும் பிளாக் கார்னர் நோட்டீஸ், குற்றவாளிகளின் சாதனங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் பர்பிள் கார்னர் நோட்டீஸ், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர், நிகழ்வு அல்லது பொருள் பற்றிய எச்சரிக்க்கை செய்யும் ஆரஞ்ச் கார்னர் நோட்டீஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலால் தேடப்படுபவர்கள் குறித்த சிறப்பு நோட்டீஸ் ஆகிய வேறு 7 நோட்டீஸ்களையும் இண்டர்போல் வெளியிடுகிறது.

வேறு தேசங்களுக்குச் சென்ற குற்றவாளிகள் மீது காவல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு கெடாமல் இருக்கவே இந்த நோட்டீஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.