பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்

Read Time:4 Minute, 42 Second

சென்னையில் நடைப்பெற்ற ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்து கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

திராவிடர் கழகமும், பெரியார் பெயரிலான பல்வேறு இயக்கங்களும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் மீது போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், துக்ளக் பத்திரிகை 50-வது ஆண்டு விழாவில் நான் பேசிய ஒரு விஷயம் சர்ச்சையாக இருந்து வருகிறது. 1971-ம் ஆண்டு நான் கூறியதுபோல் எந்த விஷயமும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். 2017-ம் ஆண்டு இந்து குழுமத்தின் ‘அவுட்லுக்’ பத்திரிகையில் 1971-ம் ஆண்டு நடந்த ஊர்வலத்தில் ராமன் – சீதை உருவபொம்மைகளுக்கு உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து எடுத்து வந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இல்லாத விஷயம் ஒன்றை நான் சொல்லவில்லை. கற்பனையாக எதையும் நான் கூறவில்லை. மற்றவர்கள் கூறியதை, இதில் வந்ததைத்தான் (பத்திரிகையை காட்டுகிறார்) நான் சொன்னேன். அங்கு வந்து தர்ணா செய்த லட்சுமணனும் அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார். நான் இல்லாத ஒன்றை கூறியதாக சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. நான் இல்லாத ஒன்றையும் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டது, இதுபோன்ற இதழ்களில் வந்ததைத்தான் சொல்லியிருக்கிறேன். நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

மூடநம்பிக்கையை எதிர்த்து பேரணி நடத்தியதால்தான் செருப்பு வீசியதாக சொல்கிறார்கள். அதாவது, ரஜினிகாந்த் அந்த வரலாற்றை மாற்றிப் பேசுவதாக கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கையில், நான் அந்த விஷயம் குறித்து தெளிவாக சொல்லிவிட்டேன். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் இப்போது அதை கிளறுகிறீர்கள். சில அதிர்ச்சியான சம்பவங்களை மீண்டும் கொண்டுவரக் கூடாது. இது மறைக்கக்கூடிய சம்பவம் அல்ல. ஆனால், மறக்கக்கூடிய சம்பவம் என்றார்.

இதற்கிடையே டுவிட்டரில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். இந்திய அளவில் இந்த ஹாஷ்டேக் நீண்ட நேரம் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதேபோல் பேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகின.

ரஜினிகாந்தின் பேட்டி தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பி கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காக போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்து சிந்தித்துப் பேச வேண்டும்,” என்று கூறினார்.