1971 – சேலம் திக பேரணியில் இந்து கடவுகள் அவமதிக்கப்பட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் வகையில் செய்தி பத்திரிக்கைகள் ஆவண செய்திகளை வெளியிட்டுள்ளது.
1971 சேலத்தில் நடந்த பேரணி குறித்து நடிஜர் ரஜினிகாந்த் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகை விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, பெரியார் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் இந்து கடவுகள் ராமர், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் சோ. ராமசாமியின் துக்ளக்கை தவிர மற்ற பத்திரிகை இதைப் பற்றி பிரசுரிக்கவில்லை எனவும் பேசியிருந்தார். சேலத்தில் 1971-ல் நடந்த நிகழ்வு இப்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு பூதாகரமாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியின் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரலாற்று சம்பவத்தை தவறாக குறிப்பிட்ட ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நேற்று அறிவித்தார். தான் பத்திரிகையில் வந்த தகவலின் அடிப்படையிலும், அப்போது நேரில் பார்த்த லட்சுமணன் சொன்ன தகவலின் அடிப்படையிலும்தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார். இதற்கிடையே 1971 – சேலம் திக பேரணியில் இந்து கடவுகள் அவமதிக்கப்பட்டது உண்மையென தெரிவிக்கும் வகையில் தினசரி பத்திரிக்கைகளில் ஆவண செய்திகள் வெளியாகியுள்ளது.
1971-ம் ஆண்டில் சேலத்தில் நடத்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளை தினத்தந்தி, திஇந்து, தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகள் ஆவண செய்தியாக வெளியிட்டுள்ளன. தி இந்துவில் ‘ஆபாச சித்தரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்ற தலைப்பில் ஜனவரி 25, 1971 பிரசுரமான செய்தியில், அதற்கு முந்தைய நாள் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்த ஊர்வலத்தில் முருகக்கடவுளின் பிறப்பு, முனிவர்களின் தவம், மோகினி அவதாரம் பற்றிய ஆபாசமான படங்கள் இருந்தன. ராமரின் 10 அடி உயரப் படம் ஒரு வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. அதை பல பேர் செருப்பால் அடித்துக் கொண்டிருந்தனர். பெரியார் ஒரு டிராக்டரில் அமர்ந்தவாறு அந்தப் பேரணியை தொடர்ந்தார். பேரணியின் முடிவில் ராமரின் கட் அவுட்டிற்கு தீ வைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானத்தில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இன்னொருவரின் மனைவி மீது ஆசைப்படுவதை குற்றமாகக் கருதாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு திக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், தி இந்து செய்தியாளர் தனது செய்தி சரியானதே என்று பதில் கொடுத்துள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. பிற செய்திகளும், இந்து கடவுகள் அவமதிக்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறது. இதற்கிடையே பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள் என ரஜினிக்கு கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து பலரும் டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.