“இந்தியா ஒருநாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்” இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Read Time:3 Minute, 41 Second

கடந்த 2008-ம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அது உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.

கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. சந்திரயான்-2 திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், அதே வேகமாகச் சென்று நிலவில் மோதியது. இதனால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

சந்திரயான்-2ஐ போலவே இதுவும் நிலவின் தெற்கு பகுதியை ஆராய்கிறது. சந்திரயான் 3-ல் லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இடம்பெற செய்யப்படுகிறது. சந்திரயான் 2-ல் இடம்பெற்ற விக்ரம் லேண்டர் போன்று இல்லாமல் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் தரையிறங்கும் வகையில் வலுவான கட்டமைப்பில் லேண்டர் கால்கள் அமைக்கப்படுகிறது. சந்திரயான்-3 திட்டத்துக்கு மொத்தமாக ரூ.600 கோடிக்கு மேல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. லேண்டருக்கு ரூ.250 கோடியும், திட்டத்தின் மற்ற செயல்பாட்டுக்கு ரூ.365 கோடியும் செலவாகும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் சந்திரயான்-3 விண்ணிற்கு ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-2ஐ ஒப்பிடும்போது இதற்கான செலவு தொகை குறைவானதாகும். சந்திரயான்-2 திட்டத்துக்கு ரூ.965 கோடி செலவு செய்யப்பட்டது.
தற்போது சந்திரயான் 3 திட்டத்திற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறிஉள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளார்களிடம் பேசிய சிவன், சந்திரயான் – 3 திட்டம் தொடங்கி, அதன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

ககன்யான் குறித்து அவர் பேசுகையில், “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள். 1984-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். ஆனால், தற்போது இந்திய வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் செல்ல இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.

சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, “ஒரு நாள் இந்தியா கட்டாயம் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை” என்று குறிப்பிட்டார். இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.