மரண தண்டனை நிறைவேற்றம்: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டலை நாடியது

Read Time:4 Minute, 0 Second

மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகும் அந்த குற்றவாளிகள், கருணை மனு, கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது தாமதம் ஆனது. இப்போது, பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், தூக்கு தண்டனையை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். ஒருவேளை, குற்றவாளி, ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால், அந்த 7 நாள் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஒரு குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனை உத்தரவு பிறப்பிப்பதை அனைத்து கோர்ட்டுகள், மாநில அரசுகள் மற்றும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு கட்டாயமாக்க வேண்டும்.

அவருடைய சக கைதிகளின் கருணை மனுவோ, மறுஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ நிலுவையில் இருந்தாலும், அந்த குற்றவாளிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதம், பலாத்காரம், கொலை போன்ற கொடூரமான குற்றங்களை நாடு சந்தித்து வருகிறது. இந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கூட விதிக்கலாம். பாலியல் பலாத்கார குற்றம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, மிகவும் கொடூரமான, நாகரமான சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். பலாத்காரம், தனிமனிதர், சமூகத்துக்கு மட்டும் எதிரான குற்றமல்ல, மனித சமூகத்துக்கே எதிரானது. பொதுமக்களின் நலன், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கருத்தில் கொண்டு, முன்பு பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை மாற்ற வேண்டும்.

கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, கொடுமையான குற்றங்களை செய்தவர்கள் சட்டத்துடன் விளையாடுவதையும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போடச் சட்டத்தைப் பயன்படுத்தி விளையாடுவதையும் அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.