குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம்… சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம்

Read Time:5 Minute, 4 Second

குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதம் வசூலிக்கலாம் என்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் ஒவ்வொரு வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை நாள்தோறும் சுமார் 5,220 டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.
அவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையின் மூலம் உரங்களும், மீத்தேன் எரிசக்தியும் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

மாநகராட்சி துப்புரவு ஊழியர்களிடம் குப்பைகளை வழங்கும் மக்களில் பெரும்பாலானோர் அவற்றை தரம் பிரித்து வழங்குவதில்லை. இதனால், பல நேரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குப்பைகளை சேகரிக்கும் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி வீடு ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோன்று மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் தனித்தனியே பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதமும் செலுத்த வேண்டும். வீடுகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், பொது இடங்கள், கடைகள், மருத்துவமனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டண நடைமுறையை 3 மாதங்களுக்குள் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தெரிவிக்கையில், திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளைக் கடுமையாக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்ட பிறகே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் பிரித்து தராதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோன்று பொது இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் இருந்தும் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அனைத்து இடங்களில் இருந்தும் குப்பைகளை சேகரிக்க தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிகளுக்கு எல்லாம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து மாநில அரசு, அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி மன்ற தீர்மானத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும். அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய கட்டண நடைமுறை செயல்படுத்தப்படும். சொத்து வரியுடன் சேர்த்து வீடுகளுக்கான குப்பை சேகரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகை உடனடியாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

வீடுகள் ரூ.10 முதல் ரூ.100 வரை, வணிக நிறுவனங்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை, நட்சத்திர விடுதிகள் ரூ.300 முதல் ரூ.3,000 வரை, திரையரங்குகள் ரூ.750 முதல் ரூ.2,000 வரை, அரசு அலுவலகங்கள் ரூ.300 முதல் ரூ.3,000 வரை, உரிமம் பெற்ற கடைகள் ரூ.500 முதல் ரூ.1,000 வரை, பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை, மருத்துவமனைகள் மற்றும் கிளனிக்குகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை, தனியார் பள்ளிகள் ரூ.500 முதல் ரூ.3,000 வரை.

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை, பொது இடத்தில் கட்டுமான கழிவுகள் கொட்டினால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை, குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதத்தொகை வசூலிக்கப்படும்.