டெல்லி பலாத்கார குற்றவாளிகளுடன் இந்திரா ஜெய்சிங்கை அடையுங்கள்… கங்கனா ஆவேசம் ஏன்?

Read Time:3 Minute, 0 Second

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பிப்ரவரி 1-ம் தேதி, தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத், “மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை சத்தமே இல்லாமல் கொலை செய்வதில் (தூக்குத் தண்டனை) என்ன பயன் இருக்கப்போகிறது.

இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.

இந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.

இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சிலர் அனுதாபங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காலதாமதம் காரணமாக அனுதாப அலையையும் குற்றவாளிகள் பெறுகிறார்கள்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கங்கனா ரனாவத் தன் கண்டனத்தையும், ஆவேசத்தையும் பதிவு செய்துள்ளார்.