சவுதியில் கேரள செவிலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; 30 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பு

Read Time:4 Minute, 2 Second

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி, உயிரை குடித்து வருகிறது.

அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள்.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது.

11 மில்லியன் (1.1 கோடி) மக்களை கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் சீனாவின் உவான் நகரின் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவியது என கண்டறியப்பட்டு உள்ளது.

சவுதியில் அபாவில் உள்ள அல் ஹயாத் மருத்துவமனையில் பணிபுரியும் சில செவிலியர்களுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு செவிலிக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியர்கள் சிலர் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு நிலையை தெரிவித்ததும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

“நாங்கள் இரண்டு நாட்களுக்கு மேலாக மருத்துவமனையின் இரண்டு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். சரியான சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை, எங்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளோம், ” என பாதிக்கப்பட்ட செவிலியர்களில் ஒருவர் மலையாள செய்தி சேனலுக்கு தொலைபேசியில் பேட்டியளிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி வெளிவந்ததும், முதல்வர் பினராயி விஜயன், உடனடி தலையீட்டைக் கோரி வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். “அபாவில் உள்ள அல் ஹயாத் மருத்துவமனையில் பணிபுரியும் சில செவிலியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளியுறவுத்துறை தலையிட வேண்டும், ”என்று பினராயி விஜயன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள அஸர் மாகாணத்தின் தலைநகரமான அபாவில் உள்ள மருத்துவமனையில்தான் செவிலியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலை சீராக இருப்பதாகவும், தூதரக அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். “100 க்கும் மேற்பட்ட இந்திய செவிலியர்கள் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர், அவர்களில் முப்பது பேர் கண்காணிப்பில் உள்ளனர். புதியதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை”என்று கூறியுள்ளார்.