சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றம்

Read Time:3 Minute, 51 Second

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

பயங்கரவாதிகள் கைது

சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட காஜா மொய்தீன், செய்யது அலி நிவாஸ், அப்துல் சமீம் ஆகியோர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும், சிறப்பு புலனாய்வு படை போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காஜா மொய்தீன், செய்யது அலி நிவாஸ் ஆகியோரை டெல்லி போலீசார் கடந்த 9-ந் தேதி டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் கைது செய்யப்பட்டுவிட்டார்.

இவர்களுக்கு செல்போன் சிம் கார்டு சப்ளை உள்ளிட்ட சகல உதவிகளையும் செய்ததாக பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனீப் கான், இம்ரான் கான், முகமது சையது உள்ளிட்ட 5 பேரையும் தமிழகத்தில் காஞ்சீபுரம், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ராஜேஷ், பச்சையப்பன், அன்பரசன், அப்துல் ரகுமான் மற்றும் லியாகத் அலி ஆகிய 5 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே மேலும் 3 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக மேலும் 3 பேர் ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டு உள்ளனர். களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம் என்பவருக்கு பண பரிமாற்றம் செய்வதற்கு உதவிய கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது ரிபாஸ் என்பவரோடு இவர்கள் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது முகமது ரிபாஸ் சிறையில் இருக்கும் நிலையில் இவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலமாக இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான பாதைக்கு திருப்பியதாகவும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை பரப்பியதாகவும் போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளனர் என பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வாட்ஸ்-அப் ஆடியோ மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய ஷேக் தாவூதை தேடி வருகின்றனர்.

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரித்த இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது. உபா சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்குகள் உள்ளதால் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.