விண்வெளிக்கு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்படும் விண்வெளியின் தோழி ‘வியோம் மித்ரா’…!

Read Time:3 Minute, 49 Second

விண்வெளியில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்தியாவின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டமாகும்.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தற்போது கையில் எடுத்து, தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் இம்மாதம் பயிற்சிக்காக ரஷியா செல்கிறார்கள்.

இதற்கு முன்னோடியாக இஸ்ரோ, வரும் டிசம்பர் மாதமும், அடுத்த ஆண்டு ஜூன் மாதமும் ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கிறது. ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்புவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ஒரு புது நுட்பத்தை சேர்த்துள்ளது. அதாவது ஆளில்லா விண்கலத்தில் வியோம் மித்ரா என்ற பேசும் பெண் ரோபோவை இஸ்ரோ அனுப்பி வைக்க உள்ளது. வியோம் மித்ரா என்பது வயோம், மித்ரா என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளாகும். வியோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் தோழி என பொருளாகும். இந்த வயோம் மித்ரா ரோபோ, பேசும் ரோபோவாகும்.

இந்த ரோபோ, பெங்களூருவில் 22-ம் தேதி ‘மனித விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வு, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்கு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. வியோம்மித்ராவை அரங்கில் அறிமுகம் செய்துவைத்தவுடன் அனைவரும் வியப்படைந்தனர். ரோபோ வியாம்மித்ராவே தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

நான் வியோம் மித்ரா பேசுகிறேன். நான் பாதி மனித ரோபோவின் முன்மாதிரி. முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்துக்காக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். என்னால் தொகுதி அளவுருக்கள் (மாடுல் பேராமீட்டர்ஸ்) மூலம் கண்காணிக்க முடியும். உங்களை எச்சரிக்க முடியும். வாழ்வியல் செயல்களை செய்ய முடியும். சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் போன்ற செயல்களை என்னால் செய்ய இயலும்.

நான் விண்வெளி வீரர்களுடன் ஒரு தோழியாக இருக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்களை அடையாளம் காண இயலும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்கவும் முடியும் என்று பெண் ரோபோ பேசியது அனைவரையும் கவர்ந்தது.

ககன்யான் திட்டம் குறித்து நிருபர்களிடம் விளக்கிய இஸ்ரோ தலைவர் கே. சிவன், இந்த வியோம் மித்ரா பற்றி கூறும்போது, “ இந்த ரோபோ விண்வெளியில் வீரர்களின் செயல்பாடுகளை மிகச்சரியாக உருவகப்படுத்தும். அமைப்பு (சிஸ்டம்) சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கும். மனிதர்கள் விண்வெளிக்கு செல்கிறபோது, இது மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.