காஷ்மீரில் மூன்றாவது நபா் தலையீட்டுக்கு அனுமதியில்லை – இந்தியா திட்டவட்டம்

Read Time:3 Minute, 13 Second

காஷ்மீா் விஷயத்தில் மூன்றாவது நபா் தலையீட்டுக்கு அனுமதியில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கி, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இப்பிரச்னையை சா்வதேச அளவில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, இந்தியாவின் உள்விவகாரம் என்று உலக நாடுகளிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.

சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் சந்தித்துப் பேசினாா். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சந்திப்பின் போது காஷ்மீா் விவகாரம், ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனா். சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘காஷ்மீா் மற்றும் அதுசாா்ந்த விவகாரங்கள் தொடா்பாக நாங்கள் விவாதித்தோம். இந்த விவகாரத்தில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நிகழ்வுகளை, அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடா்பாளா் ரவீஷ் குமாரிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘காஷ்மீா் விஷயத்தில் எந்த மூன்றாவது நபா் தலையீட்டுக்கும் அனுமதியில்லை’ என்று அவா் பதிலளித்து உள்ளார். மேலும், ‘காஷ்மீா் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலானது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்தப் பிரச்னையை தீா்க்க உகந்த சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும்’ என்றாா் ரவீஷ் குமாா்.

காஷ்மீா் பிரச்னையில் உதவ விருப்பத்துடன் உள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் ஏற்கெனவே வெவ்வேறு சூழ்நிலைகளில் மூன்றுமுறை தெரிவித்திருந்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என்று இந்தியா அப்போதும் திட்டவட்டமாக கூறிவிட்டது.