சட்டமேலவையை கலைத்து சந்திரபாபு நாயுடுவுக்கு ‘செக்’…! ஜெகன்மோகன் ரெட்டி அரசு

Read Time:2 Minute, 53 Second

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அசுர பெரும்பான்மை இருக்கிறது.
ஆனால், 58 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையில் ஒய்எஸ்ஆர் கட்சி 9 உறுப்பினர்களுடன் சிறுபான்மையாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மேலவையில் 28 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாகவும் இருக்கிறது.

தெலங்குதேசம் கட்சியின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2021-ம் ஆண்டுதான் முடிவதால், ஆளும் கட்சி கொண்டுவரும் பெரும்பாலான மசோதாக்களுக்கு மேலவை அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அதை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. ஆனால் சட்டமேலவைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்ட போது, அந்த மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்தது.

தலைநகரங்களை மாற்றும் மசோதாக்களை சிறப்புக் குழுவுக்குப் பரிசீலனைக்கு அனுப்பி மேலவை தலைவர் உத்தரவிட்டார். மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றும் மசோதா ஆகியவற்றை மேலவை திருப்பி அனுப்பியது. இதனையடுத்து, “மாநிலத்துக்கு சட்டமேலவை தேவையா என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியது இருக்கிறது” என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இதனையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கூடிய ஆந்திர அமைச்சரவை சட்டமேலவையை கலைக்க ஒப்புதல் அளித்தது.

சட்டமேலவையை கலைக்கும் தீர்மானம் என்று சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 27-ம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 175 உறுப்பினர்களில் 133 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானம் இனி மத்திய அரசுக்கும், குடியுரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமேலவை கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இதனால், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு செக் வைத்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசும் மேலவையை கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால், 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.