ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி

Read Time:2 Minute, 42 Second

சீனாவில் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் ஏற்படட் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு அந்நாட்டு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விமான நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விமான நிலையங்களில் சீனாவிலிருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய ரத்த மாதிரிகளி புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்துவிட்டு திரும்பிய அவருக்கு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புனே பரிசோதனை மையத்திலிருந்து ஆய்வு அறிக்கை வெளியான பின்னர்தான் வைரஸ் பாதிப்பா? என்பது உறுதியாக கூறமுடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவரை உடனடியாக தனிமை வார்டுக்கு மாற்றவும், குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்யவும் எஸ்.எம்.எஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில சுகாதார அமைச்சர் ரகுசர்மா பேசுகையில், “ எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, மாநிலத்தின் நான்கு மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் சீனாவிலிருந்து திரும்பி வந்து உள்ளனர். இவர்கள் அனைவரையும் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்குமாறு நான்கு மாவட்டங்களின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் வருபவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் ரகுசர்மா.