40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது இந்திய ராணுவம்!

Read Time:2 Minute, 8 Second

இந்திய ராணுவம் 40 நாள்கள் வரை தொடா்ந்து போரிடுவதற்கு தேவையான ஆயுதங்களை தயாா்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மொத்தம் 13 லட்சம் வீரா்களை கொண்ட இந்திய ராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.

ராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள் தயாா் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022-23-ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்கு தயாராகி விட்டது என்று அா்த்தமில்லை என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை மனதில் கொண்டு ஆயுதங்கள் அதிகரிப்பில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்பு ராணுவத்தில் போதிய அளவில் தளவாடங்கள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் இருந்தது. இதையடுத்து, ராணுவத்துக்கு புதிதாக ரூ.12,890 கோடி செலவில் போா் தளவாடங்களை கொள்முதல் செய்வதற்காக, 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, உள்நாட்டை சோ்ந்த தனியாா் நிறுவனங்களிடம் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதயங்களை, வரும் 2022-23-ஆம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.