‘அநீதிகளை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்’ பிரதமர் மோடி பேச்சு

Read Time:5 Minute, 25 Second

வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியரசு தின முகாமிற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருகிறார்கள். அணிவகுப்பில் ஈடுபட்டு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், இசை போன்றவற்றில் தங்களின் திறமைகளை முன்னிலையில் வெளிப்படுத்துவார்கள். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய மாணவர் படை அணிவகுப்பு புதுடெல்லியின் கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

பல்வேறு என்சிசி படைப்பிரிவுகளின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். என்சிசி படைப்பிரிவினரில் சிறந்து விளங்கியோருக்கு விருதுகள் வழங்கிய பிரதமர், பின்னர் அவர்களிடையே உரையாற்றினார். பிரதமர் மோடி பேசுகையில்,

வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களை காக்க வேண்டும் என்ற அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். சுதந்திரத்துக்கு முன் நாட்டின் பிரிவினையின்போது அநீதி இழைக்கப்பட்டது. நேரு-லியாகத் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. இதை மகாத்மா காந்தியும் விரும்பினார். அந்த அடிப்படையில் சிறுபான்மையினரை காக்கும் வகையில்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசும் சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலோடு செயல்படுகின்றன. அண்டை நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு நடக்கும் அநீதிகளை ஏன் அவர்கள் கவனிக்கவில்லை? ஏன் அதை புறம் தள்ளுகிறார்கள்? அதற்கு அவர்கள் பதில் அளிக்கவேண்டும். சிலர் தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் பாகிஸ்தானில் உள்ள தலித்துகள் பாதிக்கப்பட்டபோது ஏன் பேசவில்லை. பாகிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தானே.

நம்முடைய அரசின் முடிவுகள் குறித்து பரப்பி விடப்படும் தவறான பிரச்சாரத்தால் உலகில் நமது தேசத்தின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வதந்திகளை பரப்புபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்,

நான் என்னுடைய கவுரவத்துக்காக உழைக்கவில்லை. தேசத்தின் கவுரவத்துக்காக உழைக்கிறேன் என்பதை தான்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பிரச்சினை நீடித்து வருகிறது.

அரசியலில் உள்ள சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து இந்த விவகாரத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து அதைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை. இதனால் அங்கு தீவிரவாதமும் வளர்ந்தது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சினையை தீர்க்க முயன்றது.

அண்டை நாடான பாகிஸ்தான் நம்முடன் நடந்த மூன்று போரில் தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு இருந்த அரசுகள் இதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்த்தன. ஆனால் இதற்குப் பதிலடி கொடுக்க நமது ராணுவத்தினர் கேட்ட போது, அவர்களை முன்னோக்கிச் செல்ல அனுமதி கொடுக்கவில்லை. தற்போது ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான சூழலை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மக்களின் அபிலாஷைகள், எண்ணங்களை பேச்சுவார்த்தையின் மூலம் இந்த அரசு தீர்த்து வைத்துள்ளது என்று கூறினார்.

போடோ ஒப்பந்தம், முத்தலாக், ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 370-ஐ ரத்து என அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.