சீனா உருவாக்கிய பயோ-வெப்பன் ‘கொரோனா வைரஸ்’? புதிய தகவல்கள்

Read Time:6 Minute, 13 Second

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த டிசம்பரில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 4,500 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 769 கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என சீன மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் வைரஸ் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவ தொடங்கியது. வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்கு சீனாவில் கடல் உணவு வர்த்தக மையத்திலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம். பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்து உள்ளன என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தும்மல், தொடுதல் மற்றும் கைகளை குலுக்குவதன் மூலமாகவே எளிதாக வைரஸ் பரவுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் செல்லும் வைரஸ் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்பட செய்கிறது.

வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் ஒரு நெருக்கடியான நிலையே ஏற்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸ் போன்ற பாதிப்பை ‘கொரோனா’ வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. 2002-03 காலகட்டங்களில் சார்ஸ் வைரஸ் பரவிய போது சீனாவில் 349 பேரும், ஹாங்காங்கில் 299 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகிற்கு தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் -ஆயுதங்களை (பயோ-வெப்பன்) உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயல்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்கு இஸ்ரேலை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது.

சீனாவில் வுஹான் மாநிலத்தில் மட்டும்தான் சீன அரசு பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை உருவாக்கி இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து வுஹான் வைராலஜி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆபத்தான கிருமிகளை பற்றி மட்டும் ஆய்வு செய்யும் நிறுவனமாகும். இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியும், சீனாவின் பயோ-ஆயுதங்கள் குறித்து அறிந்தவருமான டேனி ஷோஹம் வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், ” சீனாவின் வுஹான் நகரில் மட்டும்தான் அந்நாட்டு அரசு ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், ஆய்வுக்கூடங்களையும் உருவாக்கி நடத்தி வந்தது. இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களை கொல்லும் உயிர் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும். ஒருநேரத்தில் தங்களிடம் எந்தவிதமான உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் இல்லை என சீனா மறுத்தது. ஆனால், அந்நாட்டில் அதுபோன்ற ஆய்வுக்கூடங்கள் மூலம் பயோ-வெப்பன் தயாரிப்பது உலகிற்கு தெரியவந்தது.

இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறேன். பொதுவாக ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆய்வாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பரவியிருக்கலாம், அல்லது, ஆய்வகத்தில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம். ஆனால், இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. மேலும் கனடாவில் பணியாற்றும் சீனாவின் வைராலாஜி ஆய்வாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சீனாவுக்கு மாதிரிகளை அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பும்போது பரவி இருக்கலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆய்வகத்தில் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன எனத் தகவல்கள் கிடைத்தன ” எனக் கூறியுள்ளார்.