பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்… மணமேடையிலிருந்து இந்து பெண் கடத்தப்பட்டு இஸ்லாமியருக்கு திருமணம்

Read Time:3 Minute, 12 Second

பாகிஸ்தானில் இந்து சிறுமி மணமேடையிலிருந்து கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு இஸ்லாமிய ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 24 வயதான இந்து பெண் திருமணத்திற்காக தயாராக இருந்தபோது, ஆயுதமேந்திய தாக்குதல்காரர்களால் கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பின்னர், ஒரு இஸ்லாமிய ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சிறுபான்மையின மக்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் ஹரி ராம் கிஷோரி, சிந்து மாகாணத்தின் மத்தியாரி மாவட்டத்தின் ஹலா நகரில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அறிக்கையை கேட்டுள்ளார். பாகிஸ்தான் இந்து கவுன்சில் (ஏபிஎச்சி), பாரதி பாய் (வயது 24) கடந்த வாரம் தனது திருமண விழாவில் இருந்து கடத்தப்பட்டு பின்னர் ஷாருக் குல் என்ற இஸ்லாமியருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளார்.

வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றிய பின்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதத்தை உள்ளடக்கிய இந்துக்கள் முக்கியமாக சிந்து மாகாணத்தில் உள்ளனர். அவர்கள் கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், சிந்தில் உள்ள ஜேக்கபாபாத் மாவட்டத்தில் இருந்து 15 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு ஒரு இஸ்லாமிய ஆணுடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிறுமி பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார். இதேபோன்ற சம்பவம் ஜனவரி 14 -ம் தேதி சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. இரண்டு இந்து மைனர் சிறுமிகள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் சிறு இந்து சிறுமிகள் கடத்தப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக அமைதியாக இருப்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பட்டு உள்ளது.