‘பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்…!’ பா.ஜனதாவில் இணைந்தார் சாய்னா நேவால்…

Read Time:3 Minute, 45 Second

ஹரியானாவில் பிறந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பல சர்வதேச தொடர்களை வென்று இந்தியாவுக்கு பெருமைகளை சேர்த்து உள்ளார்.

உலக இளநிலை பேட்மின்டன் போட்டியில் வென்ற முதல் பெண், ஒலிம்பிக் பேட்மின்டனில் வெண்கலம் வென்ற முதல் இந்தியர், உலக தரவரிசைப் பட்டியலில் முதன்முதலாக முதலிடம் பிடித்த இந்தியப் பெண் என பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார். இந்தியாவிற்கான பதக்கங்களை குவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் பேட்மிண்டன் போட்டிக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர் என்றால் மிகையல்ல. கிரிக்கெட்டிற்கு அடுத்தப்படியாக சிறுவர்களையும், இளைஞர்களையும் பேட்மிண்டன் போட்டியில் இறங்க செய்தவர் என்ற பெருமை சாய்னாவையே சாரும்.

பேட்மிண்டன் போட்டியில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் வெற்றியை பதித்தவர். இந்திய அரசின் விருதுகளான, அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் பத்ம பூஷண் பெற்று உள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தொடர்ச்சியாக டுவிட்டரில் பாராட்டிவந்த சாய்னா நேவால் இறுதியாக அரசியல் பிரவேசம் எடுத்து உள்ளார். இதற்காக பா.ஜனதா கட்சியை தேர்வு செய்து உள்ளார்.

டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகம் வந்த சாய்னா நேவால் தேசிய செயலாளர் அருண் சிங் முன்னிலையில் தன்னை அதிகாரபூர்வமாகக் கட்சியில் இணைத்துக்கொண்டார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரி போகத் ஆகியோரின் வரிசையில் சாய்னாவும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் பல திட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் சாய்னா நேவால்.

கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா நேவால், “நான் நாட்டுக்காக நிறைய பதக்கங்களை வென்றுள்ளேன். நான் கடின உழைப்பாளி. என்னைப்போல கடினமாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார். நாட்டிற்காக இரவு, பகலுமாக உழைக்கிறார். அவருடன் இணைந்து நானும் நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன். அரசியலையும் விளையாட்டையும் சமமாக செய்ய உள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார். விரைவில் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலில் சாய்னா நேவால் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று நாட்டுக்காக பணியாற்றும் கட்சியில் இணைந்து உள்ளேன். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதை எதிர்நோக்கி உள்ளேன் என்றும் சாய்னா நேவால் கூறியுள்ளார்.