கொரோனா வைரஸ்… சீனாவிற்கு விமானங்களை இயக்கமாட்டோம் என விமான நிறுவனங்கள் அறிவிப்பு

Read Time:2 Minute, 37 Second

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானங்களை சீனாவிற்கு இயக்கமாட்டோம் என விமான நிறுவனங்கள் அறிவித்து வருகிறது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு இதுவரையில் 131 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார், 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனா முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தாலும், வைரஸ் பரவலை தடுக்க முடியவில்லை. சீனாவின், வூஹானில் இருந்து வெளியேறியவர்கள் மூலமாக உலக நாடுகளிலும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது. விமானங்களில் பயணம் செய்தவர்கள் மூலமாகவே வூஹானிலிருந்து வைரஸ் பிற நாடுகளுக்கு சென்று உள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களில் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இப்போது நோயின் தாக்கம் அதிகரிக்கவே விமானங்களை இயக்க விமான நிறுவனங்களும் தயக்கம் காட்டுகிறது.

வைரஸ் பாதிப்பு காரணமாக விமானங்களை சீனாவிற்கு இயக்கமாட்டோம் என விமான நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. கொடிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து, அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனையின்படி, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்று ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. சிரமத்திற்கு வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விமான குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் எங்கள் முன்னுரிமை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனமும் சீனாவிற்கான விமான இயக்கலை நிறுத்தி வைத்து உள்ளது. இப்படி பிற நிறுவனங்களும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.