கொரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் 633 பேர்…!

Read Time:2 Minute, 0 Second

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 633 பேர் தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு சீனாவில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர்.

சமீபத்திய நாட்களில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மொத்தம் 633 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பை கொண்டிருக்கலாம் என்ற அவதானிப்பில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில மாநில சுகாதார அமைச்சர் கே.கே. சைலாஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்து உள்ளார்.

633 பேரில் ஏழு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சீனா, நேபாளம் அல்லது இலங்கை போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பி வந்தவர்களை எந்தவித தயக்கமும் இன்றி சுகாதாரத் துறையை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.