டெல்லி ‘நிர்பயா’ குற்றவாளிக்கு முடிவு நெருங்குகிறது…! திஹார் சிறைக்கு வரும் ‘ஹேங்மேன்’…!

Read Time:6 Minute, 21 Second

டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பரில் ‘நிர்பயா’ என அழைக்கப்படுகிற மருத்துவ மாணவி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டு விட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் தூக்கில் போட டெல்லி செசன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் மரண வாரண்டு பிறப்பித்தார். 4 பேரையும் 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமார் சிங் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது, முகேஷ் குமார் சிங் சிறையில் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். குற்றவாளி கடந்த 5 வருடங்களாக தூங்கவில்லை. தூங்க முயற்சித்தால் கனவில் மரணமும் தன்மீதான பாலியல் வன்முறையும்தான் அவரது நினைவுக்கு வருகிறது என்று கூறுகிறார் என தெரிவிக்கப்பட்டது.

கருணை மனு மீது முடிவு எடுப்பது ஜனாதிபதியின் முழு அதிகாரத்துக்கு உட்பட்டது. ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி விரைவாக முடிவு எடுத்து, அதனை நிராகரித்ததை கேள்வி எழுப்ப முடியாது. சிறை அதிகாரியின் அறிக்கை ஜனாதிபதி முன்பு வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. கருணை மனுவை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று ஆலோசனை வழங்க சிறை அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக முகேஷ் குமார் சிங் தரப்பில் சிறைத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் தனித்தனியாக ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன என்ற தகவல், குற்றவாளிக்கு அளிக்கப்படவில்லை. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று வாதிட்டார். அத்துடன் இரு தரப்பு வாதம் முடிந்தது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள், முகேஷ் குமார் சிங் வழக்கு மீதான தீர்ப்பு 29-ந்தேதி (இன்று) வழங்கப்படும் என அறிவித்தனர்.

முகேஷ் சிங்கின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதும் சரியான முடிவே. மேலும், ஜனாதிபதி உத்தரவில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. குடியரசுத் தலைவரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதை பல்வேறு அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் குமார் சிங்கின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன. இதையடுத்து இவர் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.

முடிவு நெருங்குகிறது

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங் மேன், திஹார் சிறைக்கு நாளை(வியாழக்கிழமை) வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றும் ஒத்திகை நிகழ்வும் சிறையில் நடந்து முடிந்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரின் உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் திஹார் சிறைக்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்றனர்.

திஹார் சிறையில் நிரந்தரமான ஹேங்மேன் யாரும் இல்லை என்பதால், டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவுடன், 4 பேரையும் யார் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான சரியான ஹேங்மேனையும் திஹார் சிறை நிர்வாகம் தேடி வந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத்துக்கு திஹார் சிறை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திஹார் சிறையின் இயக்குநர் சந்தீப் கோயல் கூறுகையில், “குற்றவாளிகள் 4 பேருக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் வியாழக்கிழமை திஹார் சிறைக்கு வருகிறார். மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத்தை அழைத்திருக்கிறோம். டெல்லி வந்தவுடன் சிறப்பு வாகனம் மூலம் பவான் ஜலாத் திஹார் சிறைக்கு அழைத்து வரப்படுவார்” என தெரிவித்தார்.