26 ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா பிளேக் தொற்றுடன் இந்தியா போராடியது எப்படி?

Read Time:6 Minute, 21 Second

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் பெரும் அச்சம் வெடித்து உள்ளது. உலக நாடுகளுடன் இந்தியா இந்த வைரஸ் பரவலை கையாள்வதற்கு தயார்நிலையில் உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா பிளேக் தொற்றுடன் இந்தியா போராடியது எப்படி? என்பதை பார்க்கலாம்.

1994-ல் சூரத்தில் என்ன நடந்தது?

1994 ஆகஸ்ட் மாதம் சூரத்தில் நிமோனியா பிளேக் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாக
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள மாம்லா கிரமத்திலும் புபோனிக் பிளேக் பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் ஒப்பிடும் போது நிமோனியா பிளேக் வேகமாக பரவியது. அப்போது சூரத்தில் பிளேக் பரவலாக பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த நோய் பரவல் காரணமாக அப்போது 200,000-க்கும் அதிகமான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர். இது சுதந்திரத்திற்கு பிந்தைய மிகப்பெரிய இடம்பெயர்வுகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. நிமோனியா பிளேக் விரைவில் ஐந்து மாநிலங்களுக்கும், தேசிய தலைநகர் டெல்லிக்கும் பரவியது. 1,000 க்கும் மேற்பட்டர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இந்நோய் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்களை கொன்றது.

இந்த நிமோனியா பிளேக் நோயை அரசாங்கம் எவ்வாறு கையாண்டது?

ஆரம்பத்தில் நோய் தொற்று தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடமிருந்து மாறுபட்ட அறிக்கைகள் வெளியானது பெரும் பீதிக்கு வழிவகுத்தது. அறுவைசிகிச்சை முககவசங்கள் மற்றும் மருந்து டெட்ராசை கிளின்களை வாங்க தூண்டியது. குழப்பத்திற்குப் பிறகு, விழிப்புணர்களை அரசு ஏற்படுத்தியது. நோய் பாதிப்பை அடையாளம் கண்டு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து நோய் பாதிப்பு பரவலை கட்டுப்படுத்தியது. துறைமுகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. எலிகள் அழிக்கப்பட்டது, பூச்சிக்கொல்லிகளை பரந்த பகுதிகளில் தெளிக்கப்பட்டது. நோய் தொற்றுக்கு சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மீது பழி சுமத்தப்பட்டது. பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியன் மூலம் நகரத்தை சுத்தம் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. 1995-ம் ஆண்டு மாநகராட்சியின் புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்ட எஸ்.ஆர். ராவ், சூரத்தை இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாக மாற்றினார். இதனால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போதைய கொரோனா வைரஸின் நிலைமை என்ன?

சீனாவின் வூஹானில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ் அந்த நாட்டில் 130 க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. உலகளவில் 6,000 க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. இது இப்போது அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கம்போடியா உட்பட 19 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, இருப்பினும் வைரஸ் பாதிப்பு சந்தேகத்துடன் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் மத்திய அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொள்கிறது. வைரஸ் பாதிப்பை உறுதி செய்யும் வகையில் இரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் தவிர, அலெப்பி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நான்கு ஆய்வகங்களை செயல்படுத்தி உள்ளது. கடுமையான சுவாச நோய்களின் மருத்துவ மேலாண்மை, மனித நோய்த்தொற்றுகள் குறித்த கண்காணிப்பு மற்றும் சுகாதார வசதிகளில் அவை தடுப்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதற்கான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலையும் இது வெளியிட்டுள்ளது.

1994 பிளேக்கிலிருந்து படிப்பினைகள் என்ன?

1994-ம் ஆண்டு பிளேக் என்பது அரசாங்க அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது எவ்வாறு பீதிக்கு வழிவகுக்கும் மற்றும் நோய்கள் பரவ உதவும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சாத்தியமான தொற்றை அடையாளம் காண மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்கள், குறிப்பாக வடக்கில், போதுமான சுகாதார வசதிகள் இல்லாததால், ஒரு தொற்றுநோய் இந்தியாவின் பொது சுகாதார உள்கட்டமைப்பையும் சோதிக்கும். 2018-ம் ஆண்டில், கேரளாவில் ஒரு நிபா வைரஸ் பாதிப்பு வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டது, ஏனெனில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது.