‘மேன் வெர்சஸ் வைல்டு’பியர் கிரில்சுடன் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்

Read Time:5 Minute, 31 Second

டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று சவால்களை சந்தித்து, ஆபத்துகளோடு கை குலுக்கி உயிர் பிழைத்து வருவது அவருக்கு சர்வ சாதாரணமாகத்தான் இருக்கிறது. அவர் இந்த ஆபத்தான பயணத்தில் தன்னுடன், சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்களை அழைத்து செல்வது வாடிக்கையாகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவையும், ஆபத்தான பயணத்துக்கு அவர் அழைத்து சென்றது உண்டு.

யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, பியர் கிரில்சுடன் காட்டுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள், நடுங்க வைக்கும் குளிரில் பிரதமர் மோடியும், பியர் கிரில்சும் மேற்கொண்ட சாகச பயணம் புல்லரிக்க வைத்தது. இந்த பயணம் தொடர்பான நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பிறகு தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது. இந்த சாகச பயணம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மாலை பந்திப்பூருக்கு வந்தார்.

‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்சும் பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று 6 மணி நேரம் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்சுடன் இணைந்து பந்திப்பூர் தேசிய பூங்காவில் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டார்.

பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடக்கும் இந்த சாகச பயணத்துக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலஹொலே, மத்தூர் மற்றும் கல்கேர் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்த படப்பிடிப்பால் சுற்றுலா அல்லது வழக்கமான வன ரோந்து நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது. சிறப்பு வன பாதுகாப்பின் கீழ் படப்பிடிப்பு மேற்கொள்ளப்படும். ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாளையும் (வியாழக்கிழமை) படப்பிடிப்பு நடக்கிறது. இந்த 2 நாட்களும் தலா 6 மணி நேரம் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள வனப்பகுதிகளுக்குள் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு அதிகரித்து வருகிறது, மேலும் இது அதிக மனித-விலங்கு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் வனத்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்சுடன் சென்ற சாகச பயணம் நேற்று முடிவடைந்தது. நாளை நடைபெறும் சாகச பயணத்தில் பியர் கிரில்சுடன் அக்‌ஷய்குமார் பங்கேற்பார். நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் ஆகியோர் பிரபல சாகச வீரர் பியர் கிரில்சுடன் வனப்பகுதிக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சாகச பயணத்தை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு 8 மணி அளவில் மைசூரு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, சாகச பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் தவறி விழுந்து காயமடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவருடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.