இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரள மாணவிக்கு தீவிர சிகிச்சை

Read Time:2 Minute, 17 Second

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் காணப்பட்ட வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லாத காரணத்தினால் உயிரிழப்புக்கள் வேகமாக நேரிட்டு வருகிறது.

இந்தியாவில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். வைரஸ் பாதிப்பு சந்தேகம் காரணமாக சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் மட்டும் இவ்வாறு 806 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 10 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும், மீதமுள்ளவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சுவாச நோய்த்தொற்று தொடர்பான கேள்விகளுக்கு 24×7 உதவி எண்ணை (011-23978046) பயன்படுத்துமாறு இந்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கேரள மாணவி ஒருவர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது சோதனையில் தெரியவந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனயடுத்து திருவனந்தபுரத்தில் கேரள சுகாதார அமைச்சர் கே கே சைலஜா சுகாதார அதிகாரிகளின் அவசர கூட்டத்தை நடத்தி உள்ளார்.