கொரோனா வைரசுக்கு ஆயுர்வேத தடுப்பு மருந்து – ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை

Read Time:2 Minute, 37 Second

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் அறிகுறிகளுடன் சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி கவுன்சில்கள் மேற்கொண்டன.

இந்த ஆய்வில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான பரிந்துரைகளை ஆயுஷ் அமைச்சக டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வைரஸ் தாக்குதலை தடுக்க கைகளை சோப்பு நீரில் அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். கழுவப்படாத கைகளால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடக்கூடாது. கொதிக்க வைத்த நீரை வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது. நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கி இருக்கக்கூடாது.

நோய்வாய்ப்பட்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம். இருமல் அல்லது தும்மல் வந்தால், முகத்தை மூடி தும்மிவிட்டு, பின்னர் கைகளை கழுவ வேண்டும். அடிக்கடி தொடும் பொருட்களையும் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பயணம் செய்தால், ‘என் 95‘ வகை முகமூடியை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால், முகமூடி அணிந்து உடனடியாக ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவ முறையில் தடுப்பு மருந்துகள் உள்ளன. டாக்டர்களின் அறிவுரைப்படி அவற்றை உட்கொள்ள வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.