கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய ராணுவம் சிறப்பு நடவடிக்கை…

Read Time:2 Minute, 29 Second

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

வூஹானிலிருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர்இந்தியா சிறப்பு விமானம் ஒன்று அங்கு சென்றுள்ளது.

விமானத்தில் 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவும் சென்றுள்ளது. சீனாவிலிருந்து வருபவர்களை 28 நாட்கள் தனியாக கண்காணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய மாநில அரசுக்களும் எடுத்துள்ளது. இந்திய ராணுவமும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அரியானா மற்றும் டெல்லியில் மருத்துவ வசதிகளுடன் இரு மருத்துவமனைகளை அமைத்து உள்ளது.

அரியானா மாநிலம் மானேசரில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் மருத்துவமனையை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் உகானிலிருந்து வரும் சுமார் 300 இந்திய மாணவர்களை மருத்துவ கண்காணிப்புக்காக தனிமைப்படுத்த இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், படுக்கை வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று டெல்லி சாவ்லா நகரில் உள்ள
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை முகாமில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் செய்யப்பட்டு உள்ளது.

600 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இங்கு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு உணவு, நீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.