கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம், இந்தியா முழுவதும் உஷார் நிலை

Read Time:4 Minute, 26 Second
Page Visited: 70
கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்,  இந்தியா முழுவதும்  உஷார் நிலை

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. அங்குள்ள கடல் உணவு விற்பனை சந்தையில் விற்கப்பட்ட ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவிய இந்த வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றுநோயாக மிகவும் வேகமாக பரவி வருகிறது. பாம்பிலிருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. மனிதர்கள் மூலமாகவே வேகமாக பரவுதால் உலகம் முழுவதும் பெரும் அச்சம் நிலவுகிறது.

சீனாவில் தினமும் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், ”இந்த அவசரநிலை அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் நடந்து வரும் சம்பவங்கள் அல்ல, உலகின் மற்ற நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான்” என்று குறிப்பிட்டார். சரியான சுகாதார வசதிகள் இல்லாத நாடுகளில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற கவலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிடுவது இது ஆறாவது முறையாகும்.

இதற்கு முன்பு 2016-ல் ஜிகா வைரஸ் தாக்குதல், 2014 மற்றும் 2019-ல் இபோலா தொற்று உள்ளிட்ட 5 முறைகள் மட்டுமே உலக அளவில் சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியது. நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் உள்ளதா என கண்டறிய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் இந்தியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்தது. சீனாவுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும் பொதுமக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைத்து உள்ளன.

ஜனவரி 15-ம் தேதியிலிருந்து சீனாவிற்கு சென்றவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %