கொரோனா வைரஸ்: மதுரையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முகக்கவசம்

Read Time:3 Minute, 27 Second

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைரசுக்கு மருந்து எதுவும் கிடையாது. தடுப்பு நடவடிக்கை மட்டுமே இப்போது கைவசம் இருக்கும் நடவடிக்கையாகும். முகக்கவசம் அணிவது, வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தள்ளியிருப்பதுதான் தடுப்பு நடவடிக்கையாகும். அந்நாட்டில் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முகக்கவசங்களை அணிந்து கொள்கின்றனர். அதனால், தற்போது அங்கு தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதால், மதுரையில் இருந்து முகக்கவசங்கள் அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் முகக்கவசங்கள் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. 95 சதவீத காற்று மாசையும், பாக்டீரியாக்களையும் தடுக்கும் 6 அடுக்கு N95முகக்கவசங்களுக்கு தற்போது சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால், தற்போது அதற்கு அடுத்தநிலையில் உள்ள முகக்கவசங்களுக்கு சந்தைகளில் தேவை அதிகரித்து உள்ளது. அதனால், மதுரையில் தயாரிக்கப்படும் 3 அடுக்கு முகக்கவசங்கள் தற்போது அதிக அளவு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த முகக்கவசமும், 6 அடுக்கு முகக்கவசம்போல் மிகவும் நுண்தன்மை கொண்ட பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். இந்த வகை முகக்கவசங்கள் பிரத்யேக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதுரையில் தயாரிக்கப்பட்டு வருவதாக அதன் உற்பத்தியாளர் தெரிவிக்கின்றனர். தற்போது வைரஸ் மட்டுமில்லாது காற்று மாசில் இருந்து தப்பவும், மற்ற நோய்பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளவும் தமிழகம் மற்றும்இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், மதுரையில் தயாரிக்கப்படும் இந்த முகக்கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது.

அதனால், இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு, பகலாக முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் முகக்கவசங்கள் மட்டுமல்லாமல் அங்கி (கவுன்), ஷூ கவர், தலை குல்லா உள்ளிட்ட மற்ற பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது முககவசங்களுக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. மூலப் பொருட்கள் விலைஉயர்வால் தற்போது முகக்கவசத்தின் விலையும் அதிகரித்துள்ளது. காற்றில் பரவும் பாக்டீரீயாவை முழுமையாக தடுப்பதால், மருத்துவ துறையில் இந்த முகக்கவசங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.