பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்க திட்டம் தீட்டுகிறதா?

Read Time:7 Minute, 3 Second

1947 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் அடையும் பொழுது பாரத தேசம் இந்தியா – பாகிஸ்தான் என மதத்தை அடிப்படையாக கொண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. இப்பிரிவினையின்போது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுடன் மன்னராட்சிக்கு உட்பட்ட சமஸ்தானங்களும் இருந்தன. நாடு இரண்டாக பிரிந்தபோது அனைத்து சிற்றரசர்களும் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அல்லது தனி நாடாக அவர்களே ஆட்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் பணியை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார். ஐதராபாத், ஜுனகட் போல காஷ்மீரும் இந்தியாவுடன் இணைய மறுத்தது. படேலின் முயற்சியால் ஐதராபாத், ஜுனகட் சமஸ்தானங்கள் இணைந்தன. காஷ்மீரை பொறுத்தவரை சுதந்திரமடையும்போது மன்னராக இருந்த ஹரிசிங், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதில்லை என்ற முடிவை எடுத்தார். காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஒரு இந்து. ஆனால் காஷ்மீரில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி தொடர்ந்தது.

ஜம்மு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதேவேளையில் காஷ்மீரின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். இந்நிலையில் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வளைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பின்புலத்தில் இருந்து செயல்பட்டது. இந்தசூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார்.

அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழு பொறுப்பேற்றது. இருப்பினும் பாகிஸ்தான் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் நேரு, ஐ.நா.விடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்கோடு உருவாக்கப்பட்டது. இன்றவுளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.

ஒப்பந்தத்தில் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மொத்த நிலப்பகுதியும் இந்தியாவிற்கு உரியது, இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்டது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பின் இந்தியப் படையும் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஆனால் அதற்குள் பாகிஸ்தான் படையினர் காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தனர். இந்தியப் படை மேற்கொண்டு பாகிஸ்தான் படை முன்னேறாமல் தடுத்தது. ஆனால் பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

மன்னர் ஹரிசிங் ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை விட்டு வெளியேற பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஜம்மு – காஷ்மீரின் அப்பகுதிதான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை வரையறுத்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பதற்றமான பகுதியாகவும், உலகின் ஆபத்து நிறைந்த யுத்தப் பகுதியாகவும் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் விவகாரத்தால் 3 முறை பெரிய அளவிலும் நூற்றுக்கணக்கான சிறு தாக்குதல்களும் நடந்த வண்ணம் உள்ளன.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இன்றளவும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு தன்னாட்சி நடைபெறுவதாக பாகிஸ்தான் அரசு கூறிக்கொள்கிறது. ஆனால், அப்பகுதியை இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை வளர்க்க பயன்படுத்தி வருகிறது. தற்போது, அங்கிருக்கும் பயங்கரவாத முகாம்களை அழிப்பதில் இந்திய ராணுவம் உன்னிப்பாக செயல்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை தன்னுடன் இணைக்க திட்டம் தீட்டுகிறது என தகவல்கள் வெளியாகியது. இணைப்பு தொடர்பான தகவல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக சுற்றிவருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் பருக் ஃபாரூக் ஹைதர் கான் தன்னாட்சி பிராந்தியத்தின் கடைசி பிரதமராக இருப்பார் என்று கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதேபோன்று கில்கிட்-பலுசிஸ்தான் நிலையை மாற்றவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்பட்ட பின்னர் இந்நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியது.

ஆனால், இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆய்சா பரூக்கி, இதுதொடர்பாக எந்தஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை. இது இந்தியாவின் சதி,” என்று கூறியுள்ளார்.