குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு

Read Time:5 Minute, 8 Second

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி, அவர்கள் ராஜ்காட்டில் உள்ள அன்னாரது நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல திரண்டு இருந்தனர். அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக செல்லத் தொடங்கினர். அப்போது திடீரென அங்கு புகுந்த வாலிபர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் துப்பாக்கியை தலைக்கு மேலே தூக்கியவாறு “யேஹ் லோ ஆசாடி” என சத்தமிட்டு கூறியவாறு சென்றார். அவர் கூறிய வார்த்தைகளுக்கு “இங்கே நீங்கள் உங்கள் சுதந்திரத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பொருள். உடனடியாக அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த டி.வி. சேனல் குழுவினர் படம் எடுத்தனர். சிறிது நேரத்திலேயே அந்தக் காட்சி, டி.வி. சேனல்களில் வெளியானது. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிபட்ட வாலிபர் பெயர் கோபால் என செய்திகள் வெளியானது. நடந்த சம்பவம் பற்றி ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆமினா ஆசிப் கூறும்போது, “இந்த துப்பாக்கிச் சூட்டில் எனது நண்பர் ஷாதாப் பரூக் கையில் காயம் அடைந்தார். அவர் மக்கள் தொடர்பியல் மாணவர் ஆவார். அவர் உடனடியாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்றார்.

மாணவர்கள் பேரணி, ஹோலி பேமிலி ஆஸ்பத்திரி முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கேயே அமர்ந்த மாணவர்கள், “திரும்பிப்போ, திரும்பிப்போ” என போலீசாரை பார்த்து முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி டெல்லி தென்கிழக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் சின்மாய் பிஸ்வால் கூறும்போது, “ ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர் களை அமைதியாக போராடுமாறு கூறினோம். ஹோலி பேமிலி ஆஸ்பத்திரி அருகே தடுப்பு வேலிகள் அமைத்து இருந்தோம். அந்த நேரத்தில் ஒருவர் துப்பாக்கியை காட்டியது கூட்டத்தில் தெரிந்தது. நாங்கள் அவரைப்பிடித்து விட்டோம். விசாரிக்கிறோம். ஒருவர் காயம் அடைந்துள்ளார்” என குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ சுட்டுரைப் பதிவில், “விஷமத்தனமான அரசியல் மற்றும் நாதுராம் கோட்சேவை புனிதப்படுத்துவதன் மூலம் இந்த அரசு உருவாக்கியுள்ள கோட்சே ரசிகர் மன்றத்தின் வெளிப்பாடுதான் நாடு முழுவதும் அதிகரிக்கும் இந்த வெறுப்புக் குற்றங்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவிக்கையில், “மகாத்மா காந்தியைக் கொன்ற வெறுப்புணர்வுதான் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஜாமியாவில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமளிக்கிறது. ஆனால், கடந்த ஒரு மாதமாக கட்டமைக்கப்பட்டு வரும் வெறுப்புணர்வு சூழலின் விளைவுதான் இது. பாஜக வெளியிடும் கருத்துகள்தான் இந்தச் சமூகத்துக்கு ஊக்கமளிக்கிறது. இது தில்லியை பிளவுபடுத்துவதற்கானச் செயல். இந்த அரசின் உயர்நிலையில் இருப்பவர்களால்தான் இது நடத்தப்படுகிறது” என்றார்.