சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் படங்கள் வெளியீடு

Read Time:3 Minute, 20 Second

பூமியில் இருந்து சுமார் 14 கோடியே 96 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது சூரியன். சூரியன் ஒவ்வொரு வினாடியும், 50 லட்சம் டன் ஹைட்ரஜன் எரிபொருளை எரிக்கிறது. இதை சூரியன் 500 கோடி ஆண்டுகளாக இதை செய்து வருகிறதாம். சூரியன் தன் வாழ்நாளில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு இதை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூரியனின் மேற்பரப்பு படங்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி இப்படத்தை எடுத்துள்ளது. .

இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு மிக துல்லியமாக இந்த சூரிய தொலைநோக்கி, சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பை நமது பார்வைக்காக படம் பிடித்து இருக்கிறது. இந்தப் படங்கள், சூரிய அறிவியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும். சூரியனையும், நாம் வாழும் பூமியில் அதன் தாக்கங்களையும் புரிந்து கொள்வதில் ஒரு படி முன்னே அழைத்துச்செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

சமீபத்திய இந்தப் படங்கள் முழு சூரியனையும் உள்ளடக்கிய கொந்தளிப்பான கொதிக்கும் பிளாஸ்மாவின் வடிவத்தை காட்டுகின்றன. விண்வெளி வானிலை என்று அழைக்கப்படுகிற சூரிய செயல்பாடு நமது பூமியில் உள்ள அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, இந்தப் படங்களை ஆராய்ந்து வருகிற விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்திருக்கிறது. சூரியனின் காந்த வெடிப்புகள், நமது விமான பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்; செயற்கை கோள் தகவல் பரிமாற்றங்களை சீர்குலைக்கும்; மின் கட்டமைப்புகளை வீழ்த்தும்; ஜி.பி.எஸ். போன்ற தொழில் நுட்பங்களை முடக்கும் என்பதுவும் விஞ்ஞானிகள் கணிப்பு.

இன்று வரையில் நமது சூரியனின் மிக துல்லியனமான படங்கள் இவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சூரியனின் கொரோனாவிற்குள் (சூரியனை சுற்றியுள்ள ஒளி வட்டம்) உள்ள காந்தப்புலங்களை இப்போது இனோய் சூரிய தொலைநோக்கி வரை படமாக்க முடியும். இப்போது அங்கு சூரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன. அவை பூமியில் உள்ள உயிரினங்களை பாதிக்கக்கூடும். இனோய் சூரிய தொலைநோக்கி, விண்வெளி வானிலையை திறம்பட புரிந்து கொள்ள உதவுகிறது. சூரிய புயல்களை முன்கூட்டியே கணித்து முன்கூட்டியே அறிவிக்கவும் உதவும் என குறிப்பிடுகின்றனர். சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பின் துல்லியமான படங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.