அதிக வருமானம் பெறுபவர்களுக்கு பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கும் முக்கிய தகவல்கள்:-

Read Time:6 Minute, 54 Second

2020-2021-ம் ஆண்டுக் கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய வரிகள், வரிச்சலுகைள், வருமான வரிவிகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைவது, மனிதாபிமான அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவது ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பட்ஜெட்டை தயாரித்து இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளம் பெறுவோரின் நலனை கருத்தில் கொண்டும், மக்களின் வாங்கு திறனை அதிகரிக்கும் நோக்கத்திலும் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையின்போது, திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றையும் மேற்கோள் காட்டினார்.

* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி கிடையாது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7½ லட்சம் வரை உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இது ஏற்கனவே 20 சதவீதமாக இருந்தது.

* ரூ.7½ லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏற்கனவே இது 20 சதவீதமாக இருந்தது.

* ரூ.10 லட்சம் முதல் ரூ.12½ லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். இது ஏற்கனவே 30 சதவீதமாக இருந்தது.

ரூ.12½ லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் இனி 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இது ஏற்கனவே 30 சதவீதமாக இருந்தது. ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த புதிய வரி விகிதத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இந்த திட்டத்தின்படி வரிஅளவு குறைக்கப்பட்டுள்ளபோதிலும் வரி விலக்கு பெறுவதற்கான எந்த சலுகையும் கிடையாது.

புதிய திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற சலுகை பெறுவதால் 80 சிசி உட்பட எந்த ஒரு வரி விலக்குபிரிவும் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 80 சி மற்றும் 80டி பிரிவுகளின் கீழ் தற்போது எல்டிசி, வீட்டு வாடகை, பொழுதுபோக்கு அலவன்ஸ், புரபஷனல் வரி, குடியிருக்கும் வீடு மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுக் கடன் வட்டி போன்றவற்றை செலுத்தும் தொகைகளுக்கு இனிமேல் வருமான வரிச்சலுகை பெற முடியாது.

பழைய திட்டம்

அதேசமயம் வரும் நிதியாண்டிலும் ஒருவர் முந்தைய வருமான வரி திட்டத்தின்படி கணக்கு தாக்கல் செய்ய இயலும். அவ்வாறு செய்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வருமான வரி விலக்கு உள்ளது. அதற்கு மேல் கீழ்க்கண்டவாறு வரி செலுத்த வேண்டும்

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீத வரி.

* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.10 லட்சத்திற்கு மேல் 30% வரி வசூலிக்கப்படும்.

வருமான வரி செலுத்தும் ஒருவர் பழைய அல்லது புதிய திட்டம் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அது வரி செலுத்துபவரின் தேர்வுக்கு உட்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் என்ன?

தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டிருப்பதாலும், வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தற்போது வழங்கப்பட்டு வரும் 100-க்கும் மேலான வரி விலக்கு அம்சங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 70-க்கும் மேலான அம்சங்கள் நீக்கப்படுகின்றன. புதிய வருமான வரி விதிப்பில் எந்தெந்த வரி விலக்கு அம்சங்கள் இருக்காது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

* நான்காண்டுகளில் இருமுறை அனுமதிக்கப்படும் விடுமுறை பயண படிக்கான வரிவிலக்கு நீக்கப்படஉள்ளது.

* வாடகைக்கு இருக்கும் சம்பளதாரர்கள் மாதாந்திர வாடகைக்கு வரி விலக்கு கோரலாம் என்ற தற்போதைய நடைமுறையும் நீக்கப்படும்.

* வீட்டுக்கடனில் வாங்கிய வீட்டில் குடியிருக்கும்பட்சத்தில் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோரப்பட்டு வந்தது நீக்கப்படும்.

* நிரந்தர கழிவாக உள்ள ரூ.50 ஆயிரம் நீக்கப்படும்.

* குடும்ப பென்ஷனுக்காக குறைக்கப்படும் ரூ.15 ஆயிரத்துக்கு வரி விலக்கு இருக்காது.

* 80சியில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மற்றும் முதலீடுகளான இஎல்எஸ்எஸ், என்பிஎஸ், பிபிஎஃப் போன்றவற்றுக்கான வரிவிலக்கும் இருக்காது.

* 80டியில் வழங்கப்படும் மருத்துவ காப்பீடுக்கான விலக்கும் இல்லை.

* 80டிடி, 80டிடிபி ஆகிய பிரிவுகளின் கீழ் பெறப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிவிலக்கும் ரத்து செய்யப்படும்.

* கல்விக்கடன் வட்டிக்கான வரிவிலக்கும் நீக்கப்படுகிறது.

* 80ஜி பிரிவில் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கான வரிவிலக்கும் நீக்கம் செய்யப்படுகிறது. புதிய வருமான வரி நடைமுறையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இந்த வரிவிலக்கு ஏதும் கிடைக்காது. இந்த வரி விலக்குகளை பெற விரும்புவோர் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி நடைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.