வெளிநாடுகளுக்கு முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடையை விதித்து உள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிதல், உடல் முழுவதும் மூடும் வகையில் ஆடையை அணிதல் மற்றும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக இருக்கிறது. சீனாவில் வைரஸ் அதிவேகமாக பரவி வரும் காரணத்தினால் அங்கு முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுண்கிருமிகளை தடுக்கும் விதமான அனைத்து முகக்கவசங்களையும் இந்தியாவிடமிருந்து வாங்கி சீன நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்தனர். இதனையடுத்து இந்தியாவிலும் தயாரிப்பு பணிகள் சூடுபிடித்தது.
இதற்கிடையே கேரளாவிலும் சீனாவிலிருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்தது.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடையை விதித்து உள்ளது. வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஆடை மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தனிப்பட்ட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையே இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இ-விசா
இதேபோன்று சீன மக்களுக்கும், சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இ-விசா வழங்குவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு செல்ல இ-விசா வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சீன பாஸ்போர்ட்டுடன், சீனாவை சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இ-விசா வழங்கப்பட்டிருந்தால் அது செல்லாது. இந்தியாவுக்கு செல்ல விரும்புவோர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் அல்லது குகாங்ஜூ நகரில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு காரணங்களைக் கூறி விசா பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.