ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 21 வயதான அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன்…!

Read Time:3 Minute, 15 Second

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 15-ம் நிலை வீராங்கனை சோபியா கெனின் (அமெரிக்கா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் கார்பின் முகுருஜாவுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினார்.

ஆக்ரோஷமாக ஆடிய இவர்கள் முதல் செட்டில் 4-4 என்று சமநிலைக்கு வந்தனர். அதன் பிறகு 9-வது கேமில் சோபியாவின் சர்வீசை முறியடித்த முகுருஜா அதன் மூலம் முதலாவது செட்டை வசப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட சோபியா துடிப்புடன் விளையாடி, முகுருஜாவை மிரள வைத்தார். அடுத்த இரு செட்டுகளிலும் சோபியாவின் அதிரடியான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முகுருஜா திணறினார். இவ்விரு செட்டுகளிலும் ஒரு சர்வீசை கூட விட்டுக்கொடுக்காத சோபியா கெனின், எதிராளியின் சர்வீஸ்களில் தலா 2 வீதம் தகர்த்து அசத்தினார். இறுதிகட்டத்தில் துல்லியமாக சர்வீஸ் போட முடியாமல் பதற்றத்தில் தகிடுதத்தம் போட்ட முகுருஜா, 3 டபுள் பால்டுடன் வெற்றியை சோபியாவுக்கு தாரை வார்த்தார்.

2 மணி 3 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முகுருஜாவை வீழ்த்தி கோப்பையை சொந்தமாக்கினார். சோபியா, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் 4-வது சுற்றை கூட தாண்டியதில்லை. முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான முகுருஜா இந்த ஆட்டத்தில் தாறுமாறாக தவறுகளை இழைத்தார்.

பந்தை வலுவாக வெளியே மற்றும் வலையில் அடிப்பதிலும் (45 முறை), டபுள் பால்ட் செய்வதிலும் (8 முறை) சோபியாவை விட இரண்டு மடங்கு தவறு செய்ததால் சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனை குறைந்த வயதில் ருசித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள 21 வயதான சோபியா கெனின் ரூ.20 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். அத்துடன் நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்து 7-வது இடத்தை பிடிக்கிறார். தோல்வியை தழுவிய முகுருஜாவுக்கு ரூ.10 கோடி கிடைத்தது.