48 மணிநேரத்தில் கொரோனா நோயாளியை குணமாக்கியதாக மருத்துவர்கள் அறிவிப்பு

Read Time:3 Minute, 47 Second

48 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டியை குணமாக்கியதாக தாய்லாந்து மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.

உலக மக்களை அச்சத்தில் உறையவைக்கும் `கொரோனா’ வைரஸ் சமீபகாலமாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு 361 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரசுக்கு எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் கிடையாது, தடுப்பு நடவடிக்கை மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் 48 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டியை குணமாக்கியதாக தாய்லாந்து மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.

பிற நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 71 வயது பெண் நோயாளி ஒருவருக்கு தாய்லாந்து மருத்துவர்கள் கொடுத்த மருந்தால் வைரஸ் தொற்று குணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாங்காக்கில் உள்ள ராஜவீதி மருத்துவமனையில் மூதாட்டிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சையளித்து வருகிறோம். முதலில் அவருக்கு எச்ஐவி தடுப்பு மருந்தை கொடுத்தோம். ஆனால் பயனில்லை. பின்னர் எச்ஐவி மற்றும் புளூ தொற்றுக்கான மருந்துகளை ஒன்றாக கொடுத்தோம். அடுத்த 48 மணி நேரத்தில் அந்த மூதாட்டியின் உடல்நிலை சீராகிவிட்டது.

முதலில் படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது எழுந்து அமர்கிறார், பேசுகிறார். முன்னதாக அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா வைரஸ் பாசிட்டிவாக இருந்தது. ஆனால், நாங்கள் மருந்து கொடுத்து சற்று குணமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் எடுத்த சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. அந்த மூதாட்டியின் சுவாசப் பகுதியில் எந்த வைரஸ் தொற்றும் இல்லை. இது எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. ” என்று தெரிவித்து உள்ளனர்.

`கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க தற்போது நிரூபிக்கப்பட்ட பயனுள்ள மருந்துகள் எதுவும் இல்லை’ எனக் உலக விஞ்ஞானிகள் கூறும் நிலையில் தாய்லாந்திலிருந்து இதுபோன்ற செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அதே மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த மருந்துகள் பயனளிக்கிறதா அல்லது வெற்றிகரமானதா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.