தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம் வென்றது…

Read Time:1 Minute, 36 Second

சுவீடன் நாட்டில் உள்ள போரஸ் நகரில் தங்க மங்கை சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

இதில் 75 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் இந்திய ஜூனியர் மகளிர் அணியினர் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது. இளையோர் அணி ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

ஜூனியருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற அரியானாவின் பிராச்சி தங்கர், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்.

54 கிலோ எடைப்பிரிவில் எத்தோபி சானு வாங்ஜாம், 66 கிலோ எடைப்பிரிவில் லாஷு யாதவ், 80 கிலோ எடைப்பிரிவில் மஹி ராகவ் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். இளையோர் பிரிவில் 54 கிலோ எடைப்பிரிவில் முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் சான்யா நெகி (57 கிலோ), தீபிகா (64 கிலோ), முஸ்கான் (69 கிலோ), சாக்சி ஜஹ்தலே (75 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
ஜூனியர் பிரிவில் ஜான்ஹவி சூரி (46 கிலோ), ரூடி லால்மிங்முவானி (66 கிலோ), தனிஷ்கா பாட்டீல் (80 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், தியா நெகி (60 கிலோ) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்த தொடரில் சிறந்த அணிக்கான கோப்பையையும் இந்தியா வென்றது.