மலேசிய பாமாயிலுக்கான இந்திய மறுப்பு…. சரிசெய்வோம் என களமிறங்கும் பாகிஸ்தான்…!

Read Time:4 Minute, 36 Second

காஷ்மீர் விவகாரம் மற்றும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம்தொடர்பாக மலேசிய பிரதமர் கடுமையான கருத்துகளை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு இதுதொடர்பாக எச்சரிக்கையை அனுப்பியது.

இதனையடுத்து மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தின.

கச்சா பாமாயில் இறக்குமதிகுறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை. மலேசியாவுக்குப்பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளனர். மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, தனது இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் அது மலேசியாவுக்கு பெரும் நெருக்குதலை கொடுக்கும் என்றாகியது.

பாமாயிலை பொருத்தமட்டில் மலேசியாதான் விலையை நிர்ணயிக்கும் நாடாக உள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 90 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துவந்தது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் கச்சா பாமாயில் ஒரு டன் விலை 800 டாலராகும். இதை 810 டாலருக்கு இந்தோனேசியாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சமாளிக்கும் வகையில் நடவடிக்கையை மலேசியா தொடங்கியது. இந்தியாவை எப்படியாவது மீண்டும் பாமாயிலை வாங்க செய்யும் விதமாக இங்கிருந்து சர்க்கரையை கொள்முதல் செய்யவதும் முன்வந்தது. இந்தியாவை சமாதானம் செய்யும் வகையில் அறிவிப்புகளையும் வெளியிட்டுவந்தது.

இந்நிலையில் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்திருப்பது தற்காலிகமானதுதான் என்று மலேசியா தெரிவித்துள்ளது. மலேசியாவின் பாமாயில் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், நீண்ட காலமாக இருதரப்பு உறவுகளை கொண்டிருக்கும் இருநாடுகளும் தற்போதைய சவாலான சூழலில் இருந்து மீண்டு வரும். பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவிற்கு எதிராக பேசிய காரணத்திற்காக மலேசியாவை அனுசரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது.

அதிக பாமாயில் வாங்குவோம் – இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மலேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக மலேசியாவை இந்தியா மிரட்டியதை தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம், மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்தவதாகவும் இந்தியா எச்சரித்தது. அதனை சரிக்கட்டும் விதமான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும். மலேசியாவிலிருந்து அதிகமாக பாமாயிலை வாங்குவோம்,” என உறுதி கூறியுள்ளார். மலேசியாவிலிருந்து கடந்த ஆண்டு பாகிஸ்தான் 1.1 மில்லியன் டன் பாமாயிலை வாங்கியது, அதே நேரத்தில் இந்தியா 4.4 மில்லியன் டன் பாமாயிலை வாங்கி உள்ளது என்று மலேசிய பாமாயில் கவுன்சில் தெரிவித்துள்ளது.