தாவர உணவுகள் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது

Read Time:2 Minute, 56 Second

தாவர உணவுகள் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புரோட்டீன்கள் அதிகம் உள்ள இறைச்சி, பால்பொருட்கள், சோயா போன்ற உணவுகளை குறைத்தால் இருதய ரத்தக்குழாய் நோய்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டீன்களின் உருவாக்கத்திற்கு அமினோ அமிலங்கள் முக்கியமானது. இதில், இன்னொரு துணை வகைமாதிரியான சல்பர் அமினோ அமிலங்கள், அதாவது மெதியோனைன், சிஸ்டீன் ஆகியவை உடல் ஆரோக்கியத்திலும் வளர்சிதை மாற்றங்களிலும் பலதரப்பட்ட பங்குகளை ஆற்றுகின்றன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா ஸ்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ரிச்சி கூறுகையில், பல பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளில் சல்பர் அமினோ அமிலங்கள் குறைவான உணவு முறைகள் விலங்குகளின் ஆயுளை கூட்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஆய்வில் சல்பர் அமினோ அமிலங்கள் உள்ள உணவுப்பழக்க வழக்கங்களினால் மனிதர்களில் நீண்டகால நோய்கள் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன எனக் கூறினார். இந்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. சுமார் 11,000 பேர்களின் உணவுப்பழக்க முறை, ரத்த உயிர்க்குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

இவர்களில் சல்பர் அமினோ அமிலங்கள் அடங்கிய உணவுகளை குறைவாக எடுத்து கொண்டவர்களுக்கு அவர்களது ரத்த சுழற்சி அடிப்படையில் இருதய வளர்சிதை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசரைட்டுகள், குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் ஆகிய பயோமார்க்கர்கள் இருக்கும் அளவைக் கொண்டு ஒரு கலவையான இருதய நோய் ஆபத்துகளுக்கு ஸ்கோர் அளித்து ஆய்வாளர்கள் நிர்ணயம் செய்தனர்.

“இந்த பயோமார்க்கர்கள் நோய்க்கான தனிநபர்களின் ரிஸ்க்குகள் குறித்த அடையாளங்களாகும், அதாவது உயர் கொழுப்பு எப்படி இருதய ரத்தக்குழாய் நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது” என்கிறார் ரிச்சி. தானியங்கள், காய்கள், கனிகள் அல்லாத உணவு முறைகளில் சலபர் அமினோ அமிலம் அதிகம் இல்லை, எனவே இதனை உணவுப்பழக்க முறைகளாக கொண்டால் இருதய நோய் வாய்ப்புகள் குறைகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.