தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம்… ஈசனின் அருள் பெற்று சிந்தை நிறைவோம்…

Read Time:5 Minute, 22 Second

தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் பெருமைமிகு அடையாளம். இந்த கோவில் பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில், பெரிய கோவில், ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்ற பெருமையுடன் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை எடுத்துரைக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகள், கடுமையான வெப்பம், கடுங்குளிர், பேய்மழை, புயல், சூறாவளியை எதிர்கொண்டு இன்னமும் இருந்த இடத்திலேயே இம்மியும் அசையாமல் வானுயர கம்பீரமாக நிற்கிறது.
கோவில்களின் நுழைவாயிலுக்கு மேலாக உள்ள அமைப்பு கோபுரம் எனவும், கருவறை மேலாக கட்டப்படும் அமைப்பு விமானம் எனவும் அழைக்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் மூலவர் உள்ள கருவறையின் மேலாக உள்ள விமானம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. 1004-ல் கட்ட தொடங்கிய இம்மாபெரும் கோவிலின் கட்டுமானம் 7 ஆண்டுகள் நடைபெற்றது. 1010-ல் பூர்த்தியடைந்து, கும்பாபிஷேகத்துக்கு தயாரானது. கோவிலை கட்டி முடித்து ராஜராஜன் விமரிசையாக கும்பாபிஷேகத்தை நடத்தினான். மாமன்னன் ராஜராஜசோழனின் வாழ்நாள் சாதனை பெரிய கோவில். ராஜராஜசோழன் 1010-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தியதையும், அவரும், அவரது மனைவியர் உள்பட குடும்பத்தினர் கொடுத்த தானங்களையும் கல்வெட்டு ஆவணங்களாக பதிவு செய்து இருக்கிறார்.

ராஜராஜசோழனுக்கு பிறகு தஞ்சையை ஆட்சி செய்தவர்களில் மராட்டிய வம்சத்து மன்னர்கள் மூன்று முறை பெரிய கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக தெரிகிறது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர்கள், நவாப் படையெடுப்புகளில் கோவிலை பாதுகாப்பதில் மராட்டிய மன்னர்கள் முக்கிய பங்கினை வகித்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறார்கள்.

இரண்டாம் சிவாஜி மன்னர் செய்த கும்பாபிஷேகத்துக்கு பின், 1980-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து கடந்த 1997-ம் ஆண்டு சில விரும்பத்தகாத அசம்பாவிதங்களுடன் பெரிய கோவில் கும்பாபிஷேகம் பெரும் சோகமான சூழ்நிலையில் நடந்து முடிந்தது. உறுதியான சான்றுகளின்படி கி.பி.1010-ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் மூன்று முறை மராட்டிய மன்னர்கள் ஆட்சியிலும், இரண்டு முறை மக்களாட்சியிலும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்று உள்ளன.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சை பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் பணிகள் தொடங்கியது. 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் செய்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் நாளை (புதன் கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நாளில் ஆண்-பெண்; ஒளி- இருள்; தோற்றம்- அழிவு… என்று படைப்பின் மொத்த வடிவமாக திகழும் ஈசனின் அருள் பெற்று சிந்தை நிறைவோம்.

கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளிலில் இருந்து செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.