கருத்துரிமையை கட்டுப்படுத்தி கொரோனா வைரசிடம் சிக்கியிருக்கும் சீனா…!

Read Time:5 Minute, 15 Second

சினாவில் கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் அறிகுறியை தெரிவித்த மருத்துவரை அரசு எச்சரித்து அடக்கியது. அதனால், இன்று எதிர்க்கொள்ள முடியாமல் மனித உயிர்களை பறிகொடுத்து செய்வதறியாது போராடி வருகிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதமே விநோதமான நோய் தாக்கியுள்ளது. அங்கு கடல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்படி சில நோயாளிகள் அந்நகரில் உள்ள மருத்துவர் லீ வெண்லியாங்கையும் சந்தித்து உள்ளனர். அப்போது, இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது மருத்துவருக்கு தெரியவரவில்லை. ஆனால் புதிய வகையான காய்ச்சல் என்பதை உணர்ந்துக்கொண்டார்.

சீனாவில் 2003-ம் ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸ் காணப்பட்டது. இதேபோன்றொரு வைரஸ் தொற்றாக இருக்கலாம் என எச்சரிக்க தொடங்கியுள்ளார். தன்னுடைய நண்பர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதி விசாட் மூலமாக (WECHAT) இதுகுறித்த தகவல்களை அனுப்பினார். இது ஒவ்வொருவரிடமாக சென்று இணையதளத்தில் வைரலாகியது. இதனால் லீ வெண்லியாங்குக்கு ஆபத்துதான் நேரிட்டது. அதாவது, சீனாவின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், லீ வெண்லியாங்கை கடுமையாக கண்டித்து உள்ளனர்

பொது அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும்விதமாக இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புதாக அவர் மீது குற்றம் சாட்டிய அவர்கள், இதுபோன்ற செயலை நிறுத்தும்படி எச்சரித்து உள்ளனர். மேலும், இதுபோன்ற தகவல்களைப் பரப்பினால் நீதிவிசாரணை நடத்தப்படும் என எச்சரித்து உள்ளனர். மருத்துவரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் எழுதி பெற்றுள்ளனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளும் அவரை விசாரித்தனர். இதனையடுத்து மருத்துவர் ஜனவரி 10-ம் தேதி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளித்து உள்ளார்.

அப்போது அவர் கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் என அறிந்திருக்கவில்லை. எப்போதும் போல மருத்துவ பணியை தொடங்கினார். இந்த நிலையில் லீ வெண்லியாங் கொரோனா பிடியில் சிக்கினார். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் ஜனவரி 12-ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது அவர், தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

சீன அரசாங்கம் ஜனவரி 20-ம் தேதிதான் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தெரிவித்தது. இப்போது அந்நாட்டில் 425 பேர் வைரசுக்கு உயிரிழந்து உள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் லீ-யைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக சீன அரசு கையாளும் நடைமுறை, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் நடவடிக்கையால் இப்போது கொரோனாவில் சிக்கி தவிக்கிறது. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தால் இதுபோன்ற பெரிய விபரீதத்தை தடுத்து இருக்கலாம் என அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

லீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, இந்நோய் தாக்குதல் குறித்து சில தகவல்களை விசாட்டில் பகிர்ந்து உள்ளார். தன் குடும்பத்தை நினைத்தும் வருத்தம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்நாட்டு மக்கள் ‘லீ, நீங்கள்தான் எங்கள் ஹீரோ. உங்களைப்போன்ற மருத்துவர்கள்தான் நாட்டுக்கு தேவை. ஆனால், சீன அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இதுபோன்று நிலைமை வந்தால், மருத்துவர்கள் வெளியில் சொல்ல அச்சப்படுவார்கள். லீ எச்சரித்தபோதே இதில் கவனமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நாம் இத்தனை உயிர்களை இழந்திருக்க வேண்டாம் என அவருடைய தகவலுக்கு பதில் அளித்து வருகின்றனர்.