குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள் – ரஜினிகாந்த்

Read Time:4 Minute, 25 Second

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டமும் நடைப்பெற்றது. டெல்லியில் இச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதுவரையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய கருத்தை பதிவிட்டு உள்ளார்.

சென்னையில் அவருடைய இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கையில்,

“என்பிஆர் ( தேசிய மக்கள்தொகை பதிவு) ரொம்பவே முக்கியமானது. இதனை, 2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் செய்தது. 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டாமா? அது ரொம்பவே முக்கியம். அதனால், என்ன பிரச்சினை என்று தெரியாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப்பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு சரியாக இருக்குமா? என்பது எல்லாம் பார்த்து முடிவு செய்வார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் தெளிவாக இந்திய மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இதில், பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொடுப்பதா, வேண்டாமா என்பதுதான் பிரச்சினையாகும். முக்கியமாக முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அது எப்படி? முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாகும்.

முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினை காலத்தில் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சென்றார்கள். இங்கிருக்கும் முஸ்லிகள் இதுதான் நம் நாடு, ஜென்ம பூமி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள். அந்த மாதிரி ஒன்று நடந்தால் இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

சில அரசியல் கட்சியினர் அவர்களுடைய சுயலாபத்துக்காகத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப தப்பான விஷயமாகும். முதலில், மாணவர்களுக்கு சொல்லி கொள்வது போராட்டத்தில் இறங்கும் போது தீர யோசித்து ஆராய்ந்து பின்னர் பேராசிரியர்களுடன் பேசி ஆலோசித்துவிட்டு இறங்குங்கள். இல்லையென்றால், உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்கு தான் பிரச்சினையாகும். காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் என தெரியாது. எப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்,” எனக் கூறினார்.