கந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்…!

Read Time:5 Minute, 21 Second

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத்திருநாளாகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களை போற்றும்விதமாக கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனை போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்கு தைப்பூசத் திருநாளும் உகந்ததானது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் தைப்பூசத் திருநாளாகும்.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழபகவான். ஞான வடிவமானவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதுவும் புண்ணியகாலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம் ஆகும்.

ஓர்யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத்தில்தான் நீர் தோன்றியது. நீரிலிருந்தே மற்ற அனைத்து உயிர்களும் தோன்றின என்கின்றன ஞான நூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் – தெப்பப் பந்தலில் ஈசனும் இறைவியும் முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது சான்றோர் வாக்கு. சிவனின் அம்சமே முருகப்பெருமான் என்பதை ‘ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்’ என்று கந்த புராணம் சுட்டுகிறது.

அதனால்தான் சிவனுக்கும் முருகனுக்கும் உரிய நாளாக கொண்டாடப்படுகிறது தைப்பூச திருநாள். என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்பு பெறுகிறது. அன்னை பார்வதிதேவி, மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்கவல்ல வேலாயுதத்தை உருவாக்கித்தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான்.

தமிழ்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும்.

தேவி அளித்த `வேலாயுதம்’ முருகனுக்கு பின்னர் தோன்றியதால் முருகனுக்கு தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள் சான்றோர்கள். அதனாலேயே கந்தனின் சக்திவேலை ‘ஷண்முகி’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல… அருணகிரியார், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.

சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத்தில் துடித்தார்கள். அவர்களின் துயரங்களை தேவகுருவான வியாழபகவான், முருகப்பெருமானிடம் விவரித்து சொன்னார். குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களை தீர்த்தார். வியாழபகவான், துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகனிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

தேவர்களுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடைய செய்தவர் குமரக்கடவுள். எனவேதான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகமாகும்.

மிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்த தைப்பூசத் திருநாளில் குமரன் அருள் பெற்று மகிழ்வோம். ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும். இவ்வாண்டு பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த திருநாளில் முருகனின் கோவிலை நாடிச் சென்று வழிபடுவோம். முருகனின் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாக பெறுவோம். தைப்பூசத்தன்று சிவாலயங்களுக்கு சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷ வாழ்வை பெறலாம்.